தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு நிதி ஒதுக்கியதாக பெருமைப்பட்ட பிரதமர் மோடி.. ப.சிதம்பரம் கொடுத்த பதிலடி!
சென்னை: தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, "தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிகம்" எனக் கூறினார்.

மேலும், "11 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு வளர்ச்சி, மேம்பட்ட தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்" எனப் பேசினார் பிரதமர் மோடி.
ப.சிதம்பரம் பதில்
பிரதமர் மோடி, கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட 3 மடங்கு நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் பேசியிருக்கிறார்: 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளில் (2004-2014) தமிழ்நாட்டுக்கு அளித்த நிதியை விட மூன்று மடங்கு நிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதினோறு ஆண்டுகளில் (2014-2025) தந்திருக்கிறது' என்று பெருமைப்பட்டிருக்கிறார் .
இது அசாதாரணமும் அல்ல, அதிசயமும் அல்ல!
2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவு (பட்ஜெட்) தொகை
ரூ 15,90,434 கோடி
2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவுத் தொகை
ரூ 47,16,487 கோடி
இது சாதாரணம்
வரவு-செலவுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விடக் கூடுவது நடைமுறை; வளர்ந்து வரும் நாடுகளில் அது இயல்பாக நடப்பது.
10 ஆண்டுகளில் வரவு-செலவு மொத்தத் தொகை மூன்று மடங்கு கூடும் போது ஒவ்வொரு இனத்திற்கும் திட்டத்திற்கும் செலவு கூடுவதும் நடைமுறை; அது இயல்பாக நடப்பது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்? பிரதமர் மோடியின் 10-11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளித்த நிதியை விட மூன்று மடங்கு - அல்லது அதற்கும் அதிகமான மடங்கு - நிதி அளிக்கப்படும் என்பதும் அதிசயமாகாது; இயல்பாக நடக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications