இதுதான் உண்மையான பொங்கல் பரிசு.. ஒவ்வொருத்தர் அக்கவுண்டுக்கும் ரூ.9000 வரப் போகுது! குட் நியூஸ்!
சென்னை: இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் 22வது தவணை விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனுடன், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு நிதி உதவித் தொகையை தற்போது உள்ள ரூ.6,000 இலிருந்து ரூ.8,000 அல்லது ரூ.9,000 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த PM KISAN திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை, ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ரூ.2,000 வீதம், மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இதுவரை 21 தவணைகளாக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20வது தவணை நிதியை வெளியிட்டார். இந்த நிலையில், 22வது தவணை ரூ.2,000 தொகை பிப்ரவரி மாதத்தின் முதல் பாதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம் கிசான் திட்டம்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தவணை தொகை தடையின்றி கிடைக்க வேண்டும் என்றால், விவசாயிகள் சில முக்கிய விஷயங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, PM KISAN திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் e-KYC முறையை கட்டாயம் நிறைவு செய்திருக்க வேண்டும். e-KYC செய்யாதவர்களின் பெயர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
22வது தவணை ரூ2000
இதன் காரணமாக, 22வது தவணை தொகை தாமதமாகவோ அல்லது முற்றிலும் வராமலோ போகும் அபாயம் உள்ளது. அதனால், தங்களது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் உடனடியாக சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சொந்த பெயரில் விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பம் என்றால், நில அளவு எவ்வளவு என்பது கணக்கில் கொள்ளப்படாமல் பயன் பெற முடியும்.
விவசாயி நலத் திட்டம்
முன்பு இரண்டு ஹெக்டேர் நில அளவு என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டு, சிறு மற்றும் குறு விவசாயிகள் உட்பட அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்த திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில குறிப்பிட்ட பிரிவினர் இந்த திட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நிதி உதவி
அதன்படி, எம்.பி., எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் (கிளாஸ் IV ஊழியர்கள் தவிர), மாத ஓய்வூதியம் ரூ.10,000-க்கு மேல் பெறுபவர்கள், மேலும் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், சார்ட்டேட் அக்கவுண்டெண்ட் போன்ற தொழில்முறை நபர்கள் இந்த நிதி உதவியை பெற முடியாது.
உயர்த்தப்படும் நிதி
இதற்கிடையே, PM KISAN திட்டத்தின் ஆண்டு நிதி உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதுள்ள ரூ.6,000 தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தலாம் என முதலில் பேசப்பட்ட நிலையில், தற்போது ரூ.9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்பதால், விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications