தொடங்குகிறது சென்னை மெட்ரோ 2.0.. பூந்தமல்லி - போரூர் மெட்ரோவை.. திறந்து வைக்கும் மோடி - ஸ்டாலின்!
சென்னை: பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திறப்பு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இந்த மெட்ரோ ரூட்டை திறந்து வைக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் மோடி பொங்கலுக்கு தமிழ்நாடு வரும் போது இந்த ரூட் திறந்து வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் பூந்தமல்லி - போரூர் வழித்தடம் (Corridor 4) டிசம்பரில் அல்லாமல், ஜனவரி மாதம் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வழிகள் அமைப்பதில் தாமதம், அத்துடன் தேவையான அனுமதிச் சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் 118.9 கி.மீ. நீள வழித்தட நிலைய வசதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) ஏற்றுள்ளது. பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்; சோதனை ஓட்டங்களும் நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 9 கி.மீ. நீள காரிடார் 4 (பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை, போரூர் வழியாக) தடத்தில் ஜனவரி 2026-ல் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்தடத்தில் 13 மூன்று பெட்டி ரயில்கள் சுமார் 30 ஓட்டுநர்களுடன் இயக்கப்படும். ரயில்கள் ஓட்டுநர் இல்லா முறையில் இயங்க வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றம் படிப்படியாகவே அமலாகும் என CMRL அதிகாரிகள் விளக்கினர்.
பூந்தமல்லி-போரூர் தடத்தில் உச்சநேரங்களில் ரயில்கள் ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 54 கி.மீ. நீளமுள்ள முதல் மற்றும் முதல் கட்ட நீட்டிப்பு திட்டங்களில் தற்போது 45 நான்கு பெட்டி ரயில்கள் உள்ளன. அவை உச்சநேரங்களில் ஆறு நிமிட இடைவெளியிலும், வாஷர்மேன்பேட்டை-ஆலந்தூர் தடத்தில் மூன்று நிமிட இடைவெளியிலும், சென்னை சென்ட்ரல்-விமான நிலையம்/செயின்ட் தாமஸ் மவுண்ட் வழித்தடங்களில் 12 நிமிட இடைவெளியிலும் செல்கின்றன.
இரண்டாம் கட்ட நிலையங்களின் அம்சங்கள் குறித்து ஓர் அதிகாரி ஊடகங்களிடம் கூறுகையில், "முதல் கட்டப் பெரிய நிலையங்களைவிட, புதிய நிலையங்கள் சிறியதாக இருக்கும், இதனால் பயணிகள் நடைமேடைகளை விரைவில் அடைய முடியும். முதல் கட்டத்தைப் போலவே, தேசிய பொதுப் பயண அட்டைகள் (NCMC) மற்றும் QR குறியீடு டிக்கெட்டுகளையும் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம்," என்றார்.
சென்னை மெட்ரோ
அவர் மேலும் கூறுகையில், "பூந்தமல்லி-போரூர் தடத்தில் உள்ள நிலையங்களில், முதல் கட்டத்தில் இல்லாத அரை-உயரத் தடுப்புத் திரைகள் (half-height platform screen doors) பொருத்தப்படும். பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இரண்டாம் கட்டத்தின் உயர்மட்டப் பகுதிகளில் இத்தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.
இதற்கிடையே, CMRL ரயில்வே வாரியத்திடமிருந்து முக்கிய அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது. இந்த அனுமதி கிடைத்த பின்னரே அடுத்த கட்ட பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். "நாங்கள் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்," என்று மற்றொரு அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications