நடிகர்களுடன் பொங்கல் கொண்டாட நேரம் இருக்கு! மக்களுக்காக நேரமில்லை! மோடியை விமர்சித்த காயத்ரி ரகுராம்
சென்னை: பிரதமர் மோடிக்கு நடிகர்களுடன் மட்டுமே கொண்டாட்டங்களுக்கு நேரம் உள்ளது என்றும் தமிழகம் தண்ணீரில் மூழ்கியபோது தமிழக மக்களுக்காக பிரதமர் மோடிக்கு நேரமில்லை எனவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல் முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு எல் முருகன் அழைப்பு விடுத்து இருந்தர். அதன்படி இன்று பிரதமர் மோடி அந்த விழாவில் பங்கேற்றார்.

இன்று காலை நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோக பாஜக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பெரும் தொழில் அதிபர்கள், நடிகை மீனா என பல்வேறு தரப்பினரும் பங்கேற்று இருந்தனர்.
பொங்கல் விழாவுக்காக கிராமப்புறங்களில் உள்ளதை போல எல் முருகனின் வீடு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவரது இல்லம் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. மஞ்சள், கரும்பு, வாழைகள் கட்டப்பட்டு இருந்தன. தமிழர்களின் கலாசார பாரம்பரிய நடனங்கள் நடந்தன. இதனை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து பானையில் பொங்கல் வைத்தார். பின்னர் பொங்கல் விழாவில் பேசிய பிரதமர் மோடி தமிழிலில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார். இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் பிரதமர் மோடியை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:-
நடிகை மீனா, கலா மாஸ்டர் மற்றும் அமைச்சர்களுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி. கலைஞர் டி.வி மான் ஆடா மயில் ஆடாவின் மற்ற ஜட்ஜுகள் காணவில்லை. குஷ் அக்காவுக்கும் நமிதாவுக்கும் போங்கலோ போங்கல். பாஜகவுக்கு இறுதி வரை எனது குடும்பம் தேவை. #HappyBhogi பிரதமர் மோடிக்கு நடிகர்களுடன் மட்டுமே கொண்டாட்டங்களுக்கு நேரம் உள்ளது. தமிழகம் தண்ணீரில் மூழ்கியபோது தமிழக மக்களுக்காக பிரதமர் மோடிக்கு நேரமில்லை” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications