உறக்கம் கலைந்து ஏதேதோ பேசுகின்றனர்.. பிரதமர் மோடியே உண்மையான சமூக நீதி காவலர்.. சொல்வது அண்ணாமலை
சென்னை: 'முதுகலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

சமூக நீதி வரலாற்றில் மைல்கல்
இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை வெளியிட்ட அவர், ' கடந்த பல ஆண்டுகாலமாக திமுக, அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இது சமூக நீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திமுகவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூக நீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்' என்று கூறி இருந்தார்.

தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும்
இந்தியா சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும், திமுக அதற்கு என்றும் போராடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் யார் யாரோ தங்களால்தான் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேடிக்கையாக உள்ளது
2015-ல் சலோனி குமார் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக கூறியது. எனவே, 2015-ம் ஆண்டிலேயே பாஜக அரசு தனது கொள்கை முடிவை தெளிவாக எடுத்துரைத்துவிட்டது. தற்போது யார் யாரோ உறக்கம் கலைந்து, தங்களால்தான் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது.
Recommended Video

உண்மையான சமூக நீதி காவலர் மோடி
2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோதே, இதை செய்திருக்கலாமே. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மத்திய அரசு தனது கொள்கை முடிவை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்ததால், இந்த இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தின் அங்கீகாரத்துடன் கட்டமைத்த முழு பெருமையும் பாஜகவுக்கு மட்டுமே உண்டு. பிரதமர் மோடியே உண்மையான சமூக நீதி காவலர் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications