ஜி ஜின்பிங்குடன் நெருக்கமான மோடி.. ஆனால் ஜெய்சங்கர் ஆப்சென்ட்.. முதல்முறை இப்படி! என்ன நடந்தது?
பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடன் செல்லவில்லை. அவரது உடல்நிலை சரியில்லாததால் இந்தப் பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளும், அமெரிக்காவுடன் இந்தியா மற்றும் சீனாவிற்கு மோதல் நிலவும் சூழலில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தியான்ஜினில் நடைபெறும் வருடாந்திர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை சீனா சென்றடைந்தார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கால்வான் மோதலுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.
வருடாந்திர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
சீனாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு இந்திய சமூகத்தினர் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று முழக்கமிட்டு தங்கள் வரவேற்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். பின்னர், மோடி தங்கியிருந்த ஹோட்டலில், சித்தார், சந்தூர், தபேலா போன்ற இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளை சீன கலைஞர்கள் வாசித்த இசை நிகழ்ச்சியையும் கண்டுகளித்தார்.
மோடி சீனா வருகை
பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், "இன்று உலகம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாற்றங்களால் சூழப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது. இந்த ஆண்டு சீனா-இந்தியா இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவாகும். இரு தரப்பினரும் நமது உறவை ஒரு மூலோபாய உயரத்திலும் நீண்டகால கண்ணோட்டத்திலும் அணுக வேண்டும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடியின் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. "கால்வான் பள்ளத்தாக்கில் சீனா நமது 20 வீரர்களின் உயிரைப் பறித்தது. 'ஆபரேஷன் சிந்துர்' போது, சீனா வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. பாகிஸ்தானுக்கு நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கைகளின் நேரடி தகவல்களையும் வழங்கியது. இந்த விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நரேந்திர மோடி ஒரு 'கடுமையான நடவடிக்கை' எடுத்தார். அவர் சீன அதிபருடன் சிரித்து கை குலுக்கினார்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மோடி சீனா விசிட் - டீமில் யார்?
ஜி ஜின்பிங் தூதுக்குழுவில் பிரதமர் லி கியாங், வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (அரசியல் குழு உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளியுறவு அலுவலகத்தின் இயக்குனர்), அரசியல் குழு நிலைக்குழு உறுப்பினர் சாய் கி (தலைமை அதிகாரி), அரசியல் குழு உறுப்பினர் சென் மின்'யர் மற்றும் தூதர் சூ ஃபெய்ஹாங் ஆகியோர் அடங்குவர்.
மாநாட்டில் பிரதமர் மோடியின் குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, தூதர் பிரதீப் ராவத், இணைச் செயலர் (கிழக்கு ஆசியா) கௌராங் லால் தாஸ் மற்றும் கூடுதல் செயலர் (பிரதமர் அலுவலகம்) தீபக் மிட்டல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அமைச்சர் ஜெய்சங்கர் எங்கே?
பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடன் செல்லவில்லை. அவரது உடல்நிலை சரியில்லாததால் இந்தப் பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் ஜெய்சங்கர் பங்கேற்காதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான சந்திப்புகளில் அவர் இல்லாமல் போயிருப்பது விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications