மார்ச் முதல் வாரத்தில் இருமுறை தமிழகம் வரும் பிரதமர் மோடி.. அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருமுறை தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மார்ச் 6ஆம் தேதி வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2வது வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்கும் சூழலில், அதன்பின் பள்ளிகள் தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

அதற்கேற்ப பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்பின் மார்ச் 1ஆம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் மார்ச் 6ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது ஏற்கனவே கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும், புதிதாக இணைய உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் சிறப்பு குழுக்களை நயினார் நாகேந்திரன் அமைத்துள்ளார்.
அதன்படி மதுரை பிரச்சார பயணத்தின் பொறுப்பாளராக முருகானந்தன், ராம சீனிவாசன், பொன் வி பாலகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வேலூர் சுற்றுப்பயணத்திற்கான பொறுப்பாளர்களாக கரு.நாகராஜன், கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களை திரட்டும் பொறுப்பும் இந்த குழு வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில் மீண்டும் அண்ணாமலை இடம்பெறவில்லை. மதுராந்தகம் கூட்டத்திலேயே அண்ணாமலை ஓரம்கட்டப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் மோடியை வரவேற்கும் முக்கியமான குழுவில் அண்ணாமலை இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications