71வது இந்திய அரசியலமைப்பு நாள் விழா.. நாடாளுமன்ற உரையில் குடும்ப அரசியலை சாடிய பிரதமர் மோடி!
சென்னை: 71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்தினார். வேற்றுமை கொண்ட இந்திய நாட்டை அரசியலமைப்பு சட்டம்தான் ஒருங்கிணைக்கிறது, பல தடைகளுக்கு, போராட்டங்களுக்கு பின்புதான் இந்த அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பு நாள் இன்று தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையிலும், அவரை போற்றும் வகையிலும் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம்.
முன்பு தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்ட இந்த நாள் தற்போது இந்திய அரசியலமைப்பு நாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடம் நவம்பர் 26ம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வாசித்து விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளார்.

மோடி உரை
நாடாளுமன்றத்தின் மத்திய அறையில் பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மக்கள் முன் உரையாற்றி பின்னர் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதிகளை வாசிப்பார். இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சாபங்கயற் ஓம் பிர்லா ஆகியோரும் உரை நிகழ்த்த உள்ளனர்.

டெல்லி விழா
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின் இன்று மாலை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் அரசியலமைப்பு நாளின் விழாவை தொடங்கி வைக்கிறார். இது இரண்டு நாள் விழா ஆகும். பல்வேறு விழாக்கள், கூட்டங்கள் இதில் நடக்க உள்ளன. பிரதமர் மோடி இதில் கலந்து கொள்வார்.

யார் கலந்து கொள்கிறார்கள்
இன்று மாலை நடக்கும் விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, சொலிஸ்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல், பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கடந்த 2015ல் இருந்து இந்த விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மோடி பேச்சு
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, அரசியலமைப்பு நாள் என்பது நமது நாட்டு தலைவர்களை நினைவு கூறும் நாள். நாடாளுமன்ற அவைக்கு மரியாதை செலுத்தும் நாள் இது. பல தலைவர்கள் தங்கள் சிந்தனையால் இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்கள்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி மற்றும் நாட்டுக்காக போராடிய எல்லோரையும் இன்று நினைவு கூற வேண்டும். வேற்றுமை கொண்ட இந்திய நாட்டை அரசியலமைப்பு சட்டம்தான் ஒருங்கிணைக்கிறது. பல தடைகளுக்கு, போராட்டங்களுக்கு பின்புதான் இந்த அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.

ஊழல்
ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழலுக்காக சிறை சென்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருக்க கூடாது.

கடும் விமர்சனம்
ஒரு கட்சியை ஒரு குடும்பம் வழி நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல, என்று பிரதமர் மோடி தனது உரையில் இன்று குறிப்பிட்டார். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications