பெற்ற தாய் மரணத்தின்போது கூட ஸ்ட்ராங்கா இருந்த மோடி, இப்போ எப்படி கலங்கிட்டாரு பாருங்க- அமர் பிரசாத்
சென்னை: பெற்ற தாய் மறைந்தபோது கூட ஸ்ட்ராங்காக இருந்த பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்தால் உடைந்துபோய்விட்டார் என்று போட்டோ வெளியிட்டு தமிழக பாஜக நிர்வாக அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ரயில் நேற்று முன்தினம் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.

மேலும் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
ஏனென்றால் இந்த ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் லேசான காயமடைந்தவர்கள் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய நிலையில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் நேற்று பிரதமர் மோடி ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
ரயில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது அவரது முகம் வாடியிருந்தது. பெரும் சோகத்தில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார். அதன்பிறகு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்த பிரதமர் மோடி ஆறுதல் கூறி தைரியமூட்டினார். இந்த சம்பவங்களின்போது பிரதமர் மோடியின் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.
இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் தான் தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரான அமர்பிரசாத் ரெட்டி பிரதமர் மோடியின் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛பிரதமர் மோடி தனது தாய் மறைந்தபோது கூட ஸ்ட்ராங்காக இருந்தார். ஆனால் இன்று அவர் மிகவும் கவலையுடன் காணப்படுகிறார். இந்த ரயில் விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர் பொறுத்து கொள்ள மாட்டார்'' என தெரிவித்துள்ளார்.
He was so strong even when his mother passed away, but today he is very much worried.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) June 4, 2023
He will not tolerate whoever is responsible for this Rail Accident. pic.twitter.com/1mBws0pmto
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் குஜராத் காந்தி நகரில் வசித்து வந்த பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென் வயது முதிர்வு காரணமாக தனது 100வது அகவையில் மறைந்தார். இதையடுத்து அங்கு சென்ற பிரதமர் மோடி தாயாருக்கு இறுதி சடங்குகள் செய்து உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தார். மேலும் அன்றைய தினம் பாஜகவின் எந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படவில்லை. அதோடு தாயாரின் தகனத்துக்கு பிறகு உடனடியாக பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் நடந்த புதிய ரயில் சேவை தொடக்க விழாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதற்கிடையே தான் அமர்பிரசாத் ரெட்டி இப்படி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications