விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்
பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக திமுக மீது பாமக வக்கீல் பாலு குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை: பாமகவை குறி வைத்து அவதூறு பரப்பி வருவது திருமாவளவன்தான் என்றும், விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான் என்றும் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பொன்பரப்பி கலவரம் தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொன்பரப்பி சம்பவத்தில் நடந்தது என்ன? உண்மைதன்மை என்ன? அரசியல் ஆதாயத்துக்காக இதை யார் செய்தது? போன்ற விவரங்களை விளக்கமாக கூறினார்.
"பாமகவிற்கு எதிராக விசிக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது. பொன்பரப்பி எனும் ஊரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே விசிக சார்பில் வாக்களிக்க வருபவர்களை தங்களது கட்சி சின்னமான பானையை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்துள்ளனர். அப்போது அங்கே ஓட்டு போட வந்த வீரபாண்டியன் என்பவரை வழிமறித்து விசிகவினர் பிரச்சனை செய்து தாக்கியும் உள்ளனர்.

துரத்தி சென்றனர்
அவரை ஏன் தாக்கினீர்கள் என்று கேட்க சென்ற பாமக கட்சியினரை விசிக தொண்டர்கள் கல்லால் அடித்துள்ளனர். அவர்களை விரட்டவே பாமக தொண்டர்கள் பொன்பரப்பி ஊருக்குள் துரத்தி சென்றனர். இந்த வீடியோவை விசிக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

பொன்பரப்பி
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதன்பின்னால் திமுக உள்ளது. தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

விட்டு தந்தது பாமக
தெரிந்தோ, தெரியாமலோ பாமக, விசிக மோதல் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக பாமக அங்கு போட்டியிடவில்லை. கேட்டிருந்தால் அந்த தொகுதியை தந்திருப்பார்கள். ஆனால் பாமகதான் அந்த தொகுதியை விட்டு கொடுத்துவிட்டது.

களங்கம்
ஸ்டாலினை சந்திக்கும் வரை திருமாவளவன் அமைதியாகத்தான் இருந்தார். ஸ்டாலினை சந்தித்த பிறகு போராட்டம் என்கிறார். அதனால் இதற்கு பின்னணியில் ஸ்டாலின் இருக்கிறார். இதை நான் ஆதாரப்பூர்வமாக சொல்வேன். ஆளும் தரப்புக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி செயல்படுகிறார்.

பாமக மீது அவதூறு
சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு தோல்வி கிடைக்க போகிறது. இது திருமாவளவனுக்கும் தெரிந்துவிட்டது. தான் தோற்க போகிறோம் என்று தெரிந்தபிறகு எப்படி நியாயப்படுத்துவது என்பதை அவர் திட்டமிட்டு, இதை பாமக மீது திருப்புகிறார்.

சிதம்பரம் தொகுதி
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்தியது. அது உங்கள் எல்லோருக்குமே தெரியும். திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட்டார், ஆனால் அவரை வேறு எந்த தொகுதியிலுமே பிரச்சாரம் செய்ய திமுக அனுமதிக்கவில்லை. கூட்டணி கட்சி கொடிகள் பறக்க விடுவதில் திமுக கவனமாக கையாண்டது.

திருமாவளவன்
இந்த தேர்தலில் தன்னுடைய கூட்டணி கட்சியினரை எப்படி திமுகவினர் நடத்தினார்கள் என்று ஒருநாள் திருமாவளவனே உங்களிடம் வந்து சொல்வார் பாருங்கள். அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார். பொன்பரப்பி விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப திமுக தயாரா இருக்கா? விசிகவையும் - பாமகவையும் மோத விடுகிறது திமுக" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications