அதிமுகவுடன் பஞ்சாயத்து இல்லை- பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறோம்.. பா.ம.க. விளக்கம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத சூழ்நிலையில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்றும் பாமக தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பா.ம.க. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தது. பா.ம.க.வின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயக்குமார் விமர்சனம்
பாமக விலகி தனித்துப் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாருடைய கட்டாயத்தின் பேரில் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம் போல இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்றார். மேலும் பாமக விலகியது எங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை; அது அவர்களின் உட்கட்சியினர் எடுத்த முடிவு; அதில் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை; கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. அதை விட்டு விட்டு அதிமுகவின் தலைமை பற்றியோ அதிமுகவின் உட்கட்சி விவாகாரம் பற்றியோ விமர்சிக்கக் கூடாது என்றார் ஜெயக்குமார்.

செல்லூர் ராஜூ கமெண்ட்
இதேபோல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தோளில் இருக்கும் துண்டு போலதான் கூட்டணி.. தேவை இல்லை எனில் கழற்றி வைத்துவிடலாம் என்றார். அத்துடன் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே கூட்டணி எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் இருக்கும் உள்ளூர் செல்வாக்கைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். எனவே, பாமக வெளியேறியதில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதேநேரம் கூட்டணியை நம்பி ஒருபோதும் அதிமுக இல்லை என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

பாமக விளக்கம்
இதனைத் தொடர்ந்து சென்னையில் பா.ம.க.வின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேசுவதற்கு கால அவகாசம் இல்லை. எங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. மேலும் அதிமுகவுடனான கூட்டணி என்பது சட்டசபை தேர்தலுக்கு மட்டும்தான். எங்கள் கட்சியினர் பெரும்பான்மையினரின் முடிவுப்படியே தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம். அதேநேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிக்கிறது. அடுத்த தேர்தல்களில் என்ன நிலைப்பாடு என்பதை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார் என்றார்.

ஜெயக்குமாருக்கு பாமக கண்டனம்
மேலும் பாமக தனித்துப் போட்டியிடுவது என்பது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் அல்ல. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையில் பாமக மீது விமர்சனங்களை வைக்கக் கூடாது. யூகத்தின் அடிப்படையிலான செய்திகளை வைத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் விமர்ச்சிக்கவும் கூடாது என்றும் கே.பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications