அன்புமணி ராமதாஸ் மீது பாயும் நடவடிக்கை? நாளை கூடுகிறது பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், நாளை தைலாபுரத்தில் கூடுகிறது பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு காரணமாக கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
கடந்த 9 ஆம் தேதி சென்னையில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் அருகே பொதுக்குழு நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தமாக 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த 16 குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் கேட்டு மின் அஞ்சல் மூலம் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
* இந்த நோட்டீஸ் பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
* மேலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
*கடந்த புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் மைக்கை தூக்கி எறிந்து குழப்பம் ஏற்படுத்தியது.
* ராமதாஸ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பியது.
* தைலாபுரத்தில் ராமதாஸின் இருக்கை அருகே ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
* ராமதாஸின் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டி, அவரை அவமதித்தது.
* பசுமை தாயகம் அமைப்பு மற்றும் மக்கள் டி.வியை அபகரித்தது என்பது உள்பட அடுக்கடுக்காக 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் நாளை கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. 16 குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் அளிக்கப்படாத நிலையில் இந்தக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications