பணத்தை நீட்டுனாங்க; காறித்துப்பிட்டு பஸ் ஏறிட்டேன்... பாட்டிகள் உரையாடல் வடிவில்... ராமதாஸ் சாடல்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணம் தண்ணீரை போல் வாக்காளர்களை தேடி பாய்ந்ததாக தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

ஓட்டுக்கு நோட்டு, சீட்டுக்கு ஏலம் என்ற தலைப்பில் இரண்டு பாட்டிகள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவது போல் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Pmk founder Ramadoss facebook post about rural local body election

இது தொடர்பாக ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் அப்படியே பின்வருமாறு;

சீதா பாட்டி: என்னடி ராதா.... வாயில வாழைப்பழத்தை போட்டா நேரா வயித்துக்குள்ள போற அளவுக்கு வாயை இம்மாம் பெருசுக்கு திறந்துகிட்டு வர? என்ன விசேஷம்டி. ஒரு வாரமா ஆளையே காணுமே. எங்க போயிருந்தடி?

ராதா பாட்டி: இருக்கா... இருக்கா... உள்ளாட்சித் தேர்தல்ல ஒவ்வொரு வேட்பாளரும் போட்டி போட்டு பரிசுகளை வீசுறதைப் போல, நீ பாட்டுக்கு கேள்விகளை அடுக்கிகிட்ட போற. ஒவ்வொன்னா கேளுக்கா. நீ ஒரு கேள்வி கேட்டாலே, அதுக்கே எல்லா பதிலையும் நான் சொல்லிடுவேன்க்கா. களநிலைமை அப்படித் தான்க்கா இருக்கு.

சீதா பாட்டி: என்னடி நீ... கள நிலைமை, கொல நிலைமைன்னு சொல்லி என்ன பீதியூட்டுற. வௌங்குறது மாதிரி சொல்லுடி.

ராதா பாட்டி: அக்கா... உலக விஷயம் பற்றி எனக்கு நீங்க பாடம் நடத்துவீங்க. ஆனா, உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் பற்றி நான் தான் உங்களுக்கு பாடம் நடத்த வேண்டி இருக்கு பாருங்க.

சீதா பாட்டி: விஷயத்துக்கு வாடி.

ராதா பாட்டி: வர்றேன்க்கா. பொழப்புக்காக சென்னைக்கு வந்து பத்தாண்டுகள் ஆனாலும் எனக்கு ஓட்டுலாம் சொந்த ஊருல தான் அக்கா இருக்கு. அதான் உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு போட்டுட்டு வரலாம்னு போன வாரம் ஊருக்கு போனேன். ஆனா, அங்க தேர்தல் தேர்தலா நடக்கலக்கா. பணத்தை வாரி இறைக்கும் திருவிழாவாகத் தான்க்கா . அங்க நடக்குற கூத்தைப் பார்த்து மெரண்டு போயிட்டேன்க்கா.

சீதா பாட்டி: அப்படி என்னடி செஞ்சாங்க மிரளுறதுக்கு?

ராதா பாட்டி: சொல்றேன் கேளுக்கா. எங்க ஊராட்சில 2 கிராமம்க்கா. கிராமத்துக்கு 800 வீதம் மொத்தம் 1600 ஓட்டு. தேர்தல் அறிவிச்ச உடனேயே ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்துக்கு விட்டாங்க. ஒரு லட்ச ரூபாயில ஏலம் ஆரம்பிச்சது. ஏலம் முடிஞ்ச இடம் ஒரு கோடியே ஒரு லட்சம். இப்ப சொல்லுக்கா... இதைக் கேட்டு மிரண்டு போனியா... இல்லியாக்கா?

சீதா பாட்டி: ஆமான்டி.... நீ அவ்ளோ பெருசுக்கு வாயைப் பொளந்துகிட்டு வந்ததுக்கு காரணம் இப்ப தான்டி புரியுது. 800 ஓட்டு வாங்குனா ஜெயிக்கிற பதவிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் என்றால் ஒரு ஓட்டுக்கு 12,625 ரூபாயா? என்ன கொடுமைடி இது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு சம்பளமே இல்லியேடி. மாசம் ரூ.1000 மதிப்பூதியம் மட்டும் தானேடி உண்டு. அந்த பதவிக்கா ஒரு கோடியே ஒரு லட்சம். ஜனநாயகம் எங்கேடி போவுது?

ராதா பாட்டி: அக்கா... ஆயிரம் ரூபாய் வாங்குறதுக்கா ஒரு கோடி செலவு செய்வாங்க. அதைத் தாண்டி ஆயிரம் இருக்குக்கா. ரியல் எஸ்டேட் வீட்டுமனை விற்பனைத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுப்பதில் தொடங்கி, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி தருவது வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஊராட்சித் தலைவர் கையெழுத்து அவசியம்க்கா. ஒரு கையெழுத்துக்கு சில பல லட்சம்னா போட்ட கோடியை விட பல கோடி அதிகமாக எடுத்துடுவாங்க அக்கா. அதுமட்டுமில்ல... திரையரங்கங்கள் தொடங்கி 100 நாள் வேலை வரை எல்லாவற்றிலும் கமிஷனும், கையூட்டும் உண்டு. அதனால ஒரு கோடிங்கிறது ஒண்ணுமே இல்லன்னு சொல்றாங்கக்கா.

சீதா பாட்டி: ஊராட்சித் தலைவர் பதவிக்கு இந்த அளவுக்கு வசூல்னா ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு என்ன நிலைமைடி.

ராதா பாட்டி: ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஓட்டுக்கு 1000 ரூபாய் தராங்க அக்கா. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் அதே லெவல் தான்க்கா. ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள வேட்பாளர் மற்ற வேட்பாளர்களின் செலவை ஏத்துக்கிறாருக்கா. மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு யாரோ ஒருத்தர் செலவை ஏத்துக்குவாங்க அக்கா.

சீதா பாட்டி: அப்ப ஊரே திருவிழாவாத் தான் இருக்குதுன்னு சொல்லு?

ராதா பாட்டி: அட... அதைத் தானேக்கா ஆரம்பத்திலேயே சொன்னேன். ஊர் முழுக்க பணம் தண்ணியாய் பாயுது. இன்னொரு பக்கம் தண்ணி பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரான்னு பல ஊர்களில் இருந்து வந்து சங்கமாகி வெள்ளமாக ஓடுது.

சீதா பாட்டி: என்னடி இது ஜனநாயகம். நீ ஊருக்கு போனியே இதையெல்லாம் தட்டிக் கேட்டியா?

ராதா பாட்டி: என்னது தட்டிக் கேட்கிறதா? நம்மளைத் தட்டிடுவாங்க அக்கா. நான் என் வூட்டுகிட்ட நின்னுகிட்டிருந்த போது கொஞ்சம் பேரு என்னுட்ட வந்து பணத்தை நீட்டுனாங்க. நான் அதை வாங்காம காறித் துப்பிட்டு, அந்த நேரம் அங்கு வந்து நின்ன பஸ்ல ஏறி சென்னைக்கு வந்துட்டேன் அக்கா!

சீதா பாட்டி: வாழ்க ஜனநாயகம்... வளர்க பஞ்சாயத்து ராஜ். பாருக்குள்ளே நல்ல நாடு ... ஜனநாயகம் தழைத்தோங்கும் நமது தமிழ்நாடு!

இவ்வாறு இரண்டு பாட்டிகள் உரையாடிக் கொள்வது போல், உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+