பாமக யாரின் தனிச்சொத்தும் கிடையாது.. தொண்டனாக இறங்குவேன்.. அன்புமணி ராமதாஸ் பேச்சு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இல்லாமல பாமக என்ற கட்சி இல்லை என்று கூறிய அவர், பதவிகள், பொறுப்புகள் வரும் போகும்.. ஆனால் உங்களின் அன்பு மட்டுமே நிரந்தரம் என்றும் கூறி இருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைக்காமல் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்க அன்புமணி ராமதாஸ் தான் காரணம் என்றும், பாமகவின் முக்கிய முடிவுகளில் செளமியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

பாமகவினர் வரவேற்பு
இந்த நிலையில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு பனையூரில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டு சோழிங்கநல்லூரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த போது, பாமக நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அன்புமணி பேச்சு
இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளை அமர வைத்து, பாமகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதன்பின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பாமகவின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற.. நான் என்று சொல்ல மாட்டேன்.. நாம் என்று சொல்வேன். ஏனென்றால் பாமக என்பது தொண்டர்கள் தான்.
பாமக தனி நபரின் சொத்து அல்ல
தொண்டர்கள் இல்லாமல் கட்சி கிடையாது. இது என் சொத்தோ அல்லது வேறு தனி நபரின் சொத்தோ கிடையாது. பொதுக்குழுவில் நீங்கள் முறையாக என்னை தேர்வு செய்தீர்கள். என்னுடைய கடமை உங்களுடன் இணைந்து அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன். பொறுப்புகள் வரும், போகும்.. ஆனால் உங்களுடைய அன்பும், பாசமும் மட்டுமே நிரந்தரம்.
உங்களில் ஒருவனாக..
அந்த வகையில் பாமக மாவட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். ராமதாஸின் சமூகநீதி கொள்கையை மனதில் நிறுத்தி, அதனை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக நான் இறங்குவேன். பாமகவை போல் தமிழ்நாட்டில் வேறு கட்சி கிடையாது. அதனால் பாமகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மற்ற விஷயங்கள் தொடர்பாக சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications