அய்யா ஒதுங்குவது நல்லது.. ஒட்டுமொத்தமாய் அன்புமணி பின்னால் பாமக! அடுத்தடுத்து காத்திருக்கும் சம்பவம்
சென்னை: தமிழ்நாடு அரசியலில் தற்போதைக்கு பரபரப்பான விவகாரம் என்றால் அது பாமக உட்கட்சி விவகாரம் தான். இதுவரை பாமக என்றால் ராமதாஸ் தான் என்ற நிலை மாறி அன்புமணிக்காக ராமதாஸையே புறக்கணித்து இருக்கின்றனர் மாவட்ட செயலாளர்கள். ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து இருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தது..
வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றிய ராமதாஸ், தொடர்ந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றார். ஆனால் இதுவரை அவர் தேர்தலில் போட்டியிட்டதும் கிடையாது எந்த பதவியை அனுபவித்ததும் கிடையாது. அதே நேரத்தில் ஏகே மூர்த்தி, ஏழுமலை உள்ளிட்ட பலரை மத்திய அமைச்சர்களாக மாற்றி இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதற்குப் பிறகு முழுக்க முழுக்க தீவிர அரசியலுக்கு திரும்பிய அன்புமணி தற்போது தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலை மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு அவர் எதிர்கொண்டார்.

தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கு அடுத்த தேர்தல்களில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் பாமக உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டின. 2021ல் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தாலும் பாமகவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏக்கள் கிடைத்தனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் தோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில், பாமகவுக்குள் புதிய பிரச்சனை வெடித்து இருக்கிறது. கட்சியின் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக கடந்த வாரம் வன்னியர் சங்க மாநாடு மாமல்லபுரத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசிய பேச்சு பாமகவுக்குள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநாட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் உட்கட்சி விவகாரத்தை அதுவும் தனது மகனையே மறைமுகமாக சாடியது நிர்வாகிகளை ரசிக்க வைக்கவில்லை. ஐயா உங்களுக்கு வயசு ஆயிடுச்சு ரெஸ்ட் எடுங்க என நிர்வாகிகள் வெளிப்படையாக பேச தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் ராமதாஸின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய நிலையில் 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
மேலும் கட்சியின் தலைவரான அன்புமணியும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் செயல் தலைவர் என அன்புமணியை குறிப்பிட்ட ராமதாஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது, அவர் வந்து கொண்டிருக்கலாம் என கூறினார். மேலும் இன்று இளைஞர் அணி, மகளிரணி ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் அதிலும் கிட்டத்தட்ட 80 சதவீத நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பாமக முழுக்க முழுக்க அன்புமணியின் பக்கம் இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அவர்களிடம் பேசிய போது," இதுவரை ராமதாஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் அன்புமணி. பல இடங்களில் ராமதாஸ் அன்புமணியை விமர்சித்தாலும் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசவில்லை. நீங்கள் சொல்லுங்கள் செய்கிறோம் என்று தான் கூறி வந்தார். மாநாட்டில் கூட ராமதாஸை வெகுவாக புகழ்ந்துதான் பேசியிருந்தார் அன்புமணி. அவர் பின்னால் திரள வேண்டும் எனவும் கூறினார். ஆனால் ராமதாஸோ வேறு விதமாக பேசினார்.
ஏற்கனவே ராமதாஸின் வயது மற்றும் மனநிலையை பயன்படுத்தி குடும்பத்திலும் கட்சியிலும் அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என கூறி இருந்தோம். தற்போதும் அதுதான் நடக்கிறது. கட்சியில் தற்போது தான் அதிக அளவில் இளைஞர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். சீனியர்களுக்கு கௌரவமான பதவி தரப்பட்டு மாநில பொறுப்பிலும் மாவட்ட பொறுப்பிலும் இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதனால் அன்புமணிக்கு வழி விட வேண்டிய ராமதாஸ் அயா 80 வயதுக்கு மேலாகியும் இன்னும் கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புவது ஏற்கத்தக்கதல்ல. நேற்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை, ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை ராமதாஸ் யோசித்தாலே எந்த பிரச்சனையில் இருக்காது. ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் குடும்பத்திலும் கட்சியிலும் ஒரு சிலர் சொல்வதை மட்டுமே கேட்கிறார்.
இதனால் கட்சிக்கு தான் பாதிப்பு எப்படி இருந்தாலும் பாமகவின் எதிர்காலம் அன்புமணி தான் அவரது தலைமையின் கீழ் தான் நாங்கள் செயல்பட விரும்புகிறோம். ஐயா இதனை புரிந்து கொண்டு நிறுவனராக மட்டுமே தொடர்வது நல்லது. கட்சி விவகாரங்கள் கூட்டணி விவகாரங்கள் ஆகியவற்றை அன்புமணி கவனித்துக் கொள்வது தான் சரியாக இருக்கும் இல்லை என வரும் காலங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் கூட நடக்கலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications