மாமல்லபுரத்தில் பணப்பட்டுவாடா புகார்.. மறியலில் ஈடுபட்ட பாமக, நாதக.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த கோரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி நிறைவடைந்தது.
நாளை காலை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பணப் பட்டுவாடா
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் நாளை நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள 15-வார்டுகளிலும் குறிப்பிட்ட 2 கட்சினர் (திமுக-அதிமுக) வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக ரூ.2000 முதல் 5000 ஆயிரம் வரை பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த குறிப்பிட்ட கட்சிகளின் சின்னம் பொறித்த விளம்பர நோட்டீஸ்களை மட்டும் விட்டு, விட்டு பா.ம.க. சின்னம் பொறித்த நோட்டீஸ்களை கிழித்து பேரூராட்சி தேர்தல் பணியாளர்கள் ஒருதலை பட்டசமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

போலீசார் பேச்சுவார்த்தை
மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த கோரியும் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகிய கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பணப்பட்டுவாடாவை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர். உடனே தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மறியலில் ஈடுபட்ட பா.ம.க. நாம் தமிழர் கட்சியினரை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்.

பதற்றமான சூழல்
அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தாத வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றுகூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பேரூராட்சி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் கோஷம் எழுப்பினர். அப்போது பா.ம.க.வினர் மாமல்லபுரம் டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. பிறகு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி கணேஷ்- ஐ வரவழைத்து பா.ம.க. நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சியினரிடம் மனு வாங்கி கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண கேட்டு கொண்டார்.

பலத்த பாதுகாப்பு
பிறகு மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி அங்கு வந்து பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியவுடன் பா.ம.க. மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பா.ம.க.வினரின் மறியல், முற்றுகையால் பேரூராட்சி அலுவலகத்தில் 2 மணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது. அங்கு தற்போது போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications