பிஎஃப் பணத்துல இவ்வளவு விஷயம் இருக்கா? 10 வருஷம் வேலை பார்த்தவங்களுக்குக் கிடைக்கும் சூப்பர் சலுகை!
சென்னை: தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 'வருங்கால வைப்பு நிதி' (EPF) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பொதுவாக, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 12% தொகையும், அதே அளவு தொகையை நிறுவனமும் (Employer) இந்த நிதியில் செலுத்துகின்றன. இது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால், இந்த 12% முதலாளி பங்களிப்பில் ஒரு பகுதி, உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதாந்திரப் பென்ஷன் வழங்கும் 'ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995' (EPS - Employees' Pension Scheme) என்ற தனி கணக்கிற்குச் செல்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை இங்கு பார்ப்போம்.

EPS திட்டத்திற்குப் பணம் எப்படிப் போகிறது?
நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்காகச் செலுத்தும் 12% பங்களிப்புத் தொகை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது:
உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பான 12%-ல், 8.33% தொகை EPS பென்ஷன் கணக்கிற்குச் செல்லும்.
மீதமுள்ள 3.67% தொகை மட்டுமே உங்கள் EPF கணக்கிற்குச் செல்லும்.
ஊழியராகிய நீங்கள் செலுத்தும் 12% தொகை முழுமையாக உங்கள் EPF கணக்கிற்கு மட்டுமே செல்லும், பென்ஷன் கணக்கிற்குப் போகாது)
பென்ஷன் பெற யாருக்குத் தகுதி உள்ளது?
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஓய்வூதியம் (Pension) பெற இரண்டு முக்கிய நிபந்தனைகள் உள்ளன:
நீங்கள் இத்திட்டத்தில் (EPS) குறைந்தது 10 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
உங்களுக்கு 58 வயது நிறைந்திருக்க வேண்டும்.
50 வயதில் பென்ஷன் பெற முடியுமா?
ஒருவர் 10 ஆண்டுகள் பணிமுடித்துவிட்டு, தற்போது வேலையில் இல்லை என்றால், அவர் 50 வயதை எட்டிய உடனேயே பென்ஷன் கோரலாம். ஆனால், 58 வயதுக்கு முன்பே பெறுவதால் இந்த பென்ஷன் தொகை சற்று குறைவாக (Reduced Pension) இருக்கும்.
பருவகாலத் தொழிலாளர்களுக்கும் பென்ஷன் உண்டா?
நிச்சயமாக உண்டு! சில தொழிற்சாலைகள் வருடம் முழுவதும் இயங்காது, குறிப்பிட்ட மாதங்கள் (Seasonal) மட்டுமே இயங்கும். அப்படிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் பென்ஷன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
அந்தக் குறிப்பிட்ட தொழில்கள் சில:
டீ எஸ்டேட், சர்க்கரை ஆலை, ரப்பர், புகையிலை, அரிசி ஆலை, பருப்பு ஆலை, முந்திரி ஆலை, ஓடு தயாரிப்பு, பட்டாசு ஆலை, எண்ணெய் ஆலை மற்றும் பழங்கள்/காய்கறிகள் பதப்படுத்தும் நிறுவனங்கள்.
இந்தத் துறைகளில் நீங்கள் வருடத்தின் ஒரு பகுதி மட்டும் வேலை செய்திருந்தாலும், 10 ஆண்டுகள் கணக்கில் அது சேர்த்துக்கொள்ளப்படும்.
பணத்தை எடுப்பதற்கான விதிகள் (Form 10C மற்றும் Form 10D)
நீங்கள் வேலையை விடும்பொழுதோ அல்லது ஓய்வு பெறும் பொழுதோ பென்ஷன் கணக்கில் உள்ள பணத்தை எப்படிப் பெற வேண்டும் என்பதற்கு இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன:
1. 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகளுக்குள் வேலை செய்திருந்தால்:
நீங்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக வேலை செய்திருந்தால், பென்ஷன் பணத்தை மாதாந்திர பென்ஷனாகப் பெற முடியாது. அதற்குப் பதிலாக மொத்தப் பணத்தையும் ஒரே தவணையாக (Lump sum) எடுத்துக்கொள்ளலாம். இதற்கு 'ஃபார்ம் 10சி' (Form 10C) என்ற படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
2. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்திருந்தால்:
நீங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தால், மொத்தப் பணமாக எடுக்க முடியாது. உங்களுக்கு 58 வயது நிறைவடைந்ததும் மாதாந்திர பென்ஷனாக மட்டுமே இது வழங்கப்படும். இந்த வழக்கமான பென்ஷனைப் பெற 'ஃபார்ம் 10டி' (Form 10D) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
(50 வயது முடிந்து, குறைக்கப்பட்ட பென்ஷன் (Reduced Pension) பெற விரும்புபவர்களும் இதே 'ஃபார்ம் 10டி' படிவத்தையே சமர்ப்பிக்க வேண்டும்).
இத்திட்டத்தின் பிற நன்மைகள் என்ன?
EPS 1995 திட்டம் உங்களுக்கு 58 வயதிற்குப் பின் மாதாந்திர வருமானம் தருவதோடு மட்டுமல்லாமல், எதிர்பாராத சூழ்நிலைகளிலும் துணையாக நிற்கிறது:
நிரந்தர ஊனம்: பணியில் இருக்கும்போது எதிர்பாராதவிதமாகப் நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ஊழியருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கப்படும் (இதற்கு 10 ஆண்டுகள் பணிமுடிக்க வேண்டிய அவசியமில்லை).
குடும்ப பென்ஷன்: துரதிர்ஷ்டவசமாக ஊழியர் இறக்க நேரிட்டால், அவரது கணவர்/மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) வழங்கப்படும்.
உங்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க இந்த பிஎஃப் மற்றும் பென்ஷன் திட்டங்கள் பெரிதும் உதவும். எனினும், உங்களின் எதிர்காலத் தேவை மற்றும் வாழ்க்கை முறைக்கு இந்தத் தொகை போதுமானதா என்பதைத் திட்டமிட்டு, கூடுதலாகச் சிறுகச் சிறுக வேறு சேமிப்புகளையும் மேற்கொள்வது எப்போதும் புத்திசாலித்தனமாகும்.












Click it and Unblock the Notifications