அன்புமணி பக்கம் வந்த காடுவெட்டி குரு வாரிசு.. தைலாபுரத்தை தகிக்க வைத்த மீட்டிங்! ஸ்ட்ராங் ஆகும் பாமக
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாமக வட்டாரங்களில் கவனம் ஈர்க்கும் ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு பாமக ராமதாஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அன்புமணி தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸிடமும், வன்னியர் சங்கத்திலும் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றிருந்த காடுவெட்டி குருவுக்கும் இடையிலான உறவு ஒருகாலத்தில் மிக நெருக்கமானதாக இருந்தது. ராமதாஸ், குருவை தனது மூத்த மகன் போலவே பார்த்தார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தில் குருவுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார் என்றும் பாமக மூத்த நிர்வாகிகள் நினைவுகூர்கின்றனர். வன்னியர் இளைஞர்கள் மத்தியில் 'மாவீரன்' என்ற அடையாளத்துடன் குரு கொண்டிருந்த செல்வாக்கு, பாமகவின் அரசியல் பலத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.

பாமக அரசியல்
ஆனால் 2018 ஆம் ஆண்டு காடுவெட்டி குரு உடல்நலக் குறைவால் காலமான பிறகு, அவரது குடும்பத்தினருக்கும் பாமக தலைமைக்கும் இடையிலான உறவு சீர்குலையத் தொடங்கியது. குருவின் மருத்துவ சிகிச்சை காலத்தில் ராமதாஸ் தேவையான உதவிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, குருவின் தங்கை மீனாட்சி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிப்படையாகவே ராமதாஸை விமர்சித்தனர். இதன் விளைவாக, பாமக மற்றும் காடுவெட்டி குடும்பம் இடையே இருந்த நெருக்கம் மெதுவாக இடைவெளியாக மாறியது.
காடுவெட்டி குரு
காலப்போக்கில் இந்த இடைவெளி ஆழமான விரிசலாக மாறி, காடுவெட்டி குடும்பத்தினர் தனி அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு சென்றனர். காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், பாமகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 'மாவீரன் மஞ்சள் படை' என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதேபோல், குருவின் மகள் விருதாம்பிகையும் 'ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
குரு மகன் கனலரசன்
இந்தச் சூழலில்தான், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காடுவெட்டி குருவின் பிறந்த நாளை முன்னிட்டு வன்னியர் ஜெயந்தி விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன், கனலரசன் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு பாமக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
வன்னியர் சமூகம்
அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தில் கணிசமான செல்வாக்கு கொண்டவராக கனலரசன் பார்க்கப்படுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் அன்புமணியை சந்தித்திருப்பது, பாமக அன்புமணி தரப்பினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் கட்சி ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதே நேரத்தில், பாமகவுக்குள் ராமதாஸ்-அன்புமணி இடையிலான அதிகார மோதலும் வெளிப்படையாகி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் தொடங்கிய இந்த மோதல், தேர்தல் ஆணைய அங்கீகாரம் மற்றும் மாம்பழம் சின்னம் தொடர்பான உரிமை விவகாரமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் மாம்பழம் சின்னம் இடம்பெற்றது ராமதாஸ் தரத்தை கோபப்படுத்தியது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை ராமதாஸுடன் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தைகளை நிறுத்திவிட்டன.
2026 சட்டமன்றத் தேர்தல்
இப்படி உட்கட்சிப் பூசல்கள் தொடரும் நிலையில், காடுவெட்டி குருவுக்குப் பிறகு பாமக அரசியலில் இருந்து விலகி இருந்த கனலரசன், தற்போது அன்புமணியை சந்தித்திருப்பது, பாமகவில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் நாட்களில் பாமக உட்கட்சி அரசியலில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications