PMK: 3 முக்கிய முடிவுகள்.. ஏற்றுக்கொண்ட ராமதாஸ் - அன்புமணி.. பாமக பஞ்சாயத்துக்கு எண்ட் கார்டு!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், தற்போது, இருவரும் சமாதானம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே அண்மையில் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியது. தைலாபுரம் தோட்டத்தில் கடந்த வாரம் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோரைப் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவதாக ஒப்புக் கொண்டால் கட்சியில் நீடிக்க முடியும். இல்லையென்றால் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் அனைத்து விவகாரங்களில் இருந்து நீக்கம் செய்வேன் என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நான் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறினார். மேலும், "உங்களையும் யாராலும் நீக்க முடியாது. நீக்கிய மறு நிமிடம் நீங்கள் மீண்டும் இணைக்கப்பட்டீர்கள் என்ற கடிதம் வந்து சேரும்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம், அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி வந்தார். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களாக அறியப்படும் பாமக நிர்வாகிகளையும் அந்த பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டு வருகிறார்.
அதிகாரம் யார் கையில்?
பெரும்பாலான பாமக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அன்புமணிக்கு இருப்பதால் பொதுக்குழுவை கூட்டினால் அது அன்புமணிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அன்புமணி பொதுக்குழுவால் 2022 மே 28ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து பதவிக்காலமும் முடிந்துவிட்டது. எனவே பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தான் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது எனக் கூறப்பட்டது.
முகுந்தன் பிரச்சனை
ராமதாஸ் - அன்புமணி பிரச்சனை இப்போது வெடிக்க மூல காரணம் என்பது இளைஞர் அணித் தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்தது தான். அந்த நியமனத்தில் இருந்து தான் இருவருக்குமான பிரச்சனை பொதுவெளியில் வெடித்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இளைஞர் அணித் தலைவர் பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக முகுந்தன் அன்புமணிக்கு கடிதம் எழுதினார். அதில் ராமதாஸ் தான் தனது குல தெய்வம் என்றும், அன்புமணி தான் எதிர்காலம் என்றும் குறிப்பிட்டார்.
சமரச பேச்சுவார்த்தை
இந்நிலையில், ராமதாஸும், அன்புமணியும் பிரிந்து நிற்பது கட்சிக்கு நல்லதல்ல என்று பாமக மூத்த தலைவர்கள் மற்றும் ராமதாஸ் குடும்பத்தினர் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளை ராமதாஸ் மகள்கள் காந்தி, கவிதா உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அன்புமணி இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு தனது தந்தை ராமதாஸை சந்திக்கச் சென்றார். இருவருக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் 3 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், கட்சி நலன் கருதி இருவரும் இந்த முடிவுகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 முக்கிய முடிவுகள்
- பாமகவின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார்.
- ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பதவி வழங்கப்படும். அதனை அன்புமணி எதிர்ப்பு இன்றி ஏற்றுக்கொள்வார்.
- பாமக வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை ராமதாஸ் முடிவு செய்வார்.
இந்த முடிவுகளுக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து பாமகவின் உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இதுகுறித்து தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications