ஆமைகளை பாதுகாக்க ஆர்வம் காட்டும் அன்புமணி ராமதாஸ்! ஆமை முட்டைகளை கண்காணிக்க தனி பணியாட்கள்!
அரிய வகை கடல் ஆமைகளை பாதுகாக்க அன்புமணி மிகுந்த ஆர்வம்.
சென்னை: அரிய வகை கடல் ஆமைகளையும், ஆமை முட்டைகளையும் பாதுகாக்க ஆர்வம் காட்டி வரும் அன்புமணி ராமதாஸ் இதற்காக தனி பணியாட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து மாதம்தோறும் ஊதியம் கொடுத்து வரும் அவர், ஆமை முட்டைகளை நாய்கள் உண்டுவிடாதபடி பாதுகாத்து வருவதுடன் இது குறித்து வனத்துறையினருக்கும் உடனடியாக தகவல் அளிக்க தனது பணியாட்களை அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

கிழக்கு கடற்கரை சாலை
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதிக்கு குடிபெயர்ந்து பல மாதங்கள் ஆகின்றன. சென்னையின் போக்குவரத்து நெரிசல், புகை, மாசு, உள்ளிட்டவைகள் தான் அவர் கிழக்கு கடற்கரை சாலைக்கு குடிபெயர காரணமாகும். இந்நிலையில், அக்கரை கடற்பகுதியில் அரிய வகை கடல் ஆமைகளையும், ஆமை முட்டைகளையும் பாதுகாப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதோடு அன்புமணி அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அரிய வகை கடல் ஆமைகள்
அக்கரை பகுதி கடற்கரையில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இந்தப் பகுதியானது ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதியாக இருக்கிறது. அப்பகுதியில் தான் கடற்கரை ஓரம் அனுமதிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளின் செயல்பாட்டினால் அப்பகுதி முழுவதும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், உணவுக் கழிவுகளாலும் மாசடைந்திருக்கின்றன.

தனி பணியாட்கள்
உணவுக்கழிவுகளைத் தேடி நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் நடமாடி வருகின்றன. அவ்வாறு உணவுக் கழிவுகளுக்காக வரும் தெரு நாய்கள், ஆமை முட்டைகளையும் உண்டு விடுகின்றன. இதனிடையே அக்கரை பகுதிக்கு ஆமை முட்டையிட வந்திருப்பதை நடைபயிற்சியின் போது கவனித்த அன்புமணி ராமதாஸ், தனது அலுவலக உதவியாளர்களிடம் ஆமைகளை கண்காணித்து, முட்டையிட்டதும் வனத்துறைக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தியிருந்தார்.

136 ஆமை முட்டைகள்
அன்புமணி ராமதாஸ் நியமித்த பணியாட்கள் கூறிய தகவலை அறிந்து சென்ற வனத்துறையினர், அக்கரை பகுதியில் 136 ஆமை முட்டைகளை கைப்பற்றி, பொறிக்க வைக்கும் முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். ஆமை இனங்களை காப்பதற்கும், கடற்கரை மாசடையாமல் இருப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications