ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே காரணம்.. மசோதாவையே திருப்பி அனுப்புவீங்களா? கொந்தளித்த அன்புமணி
"அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்"
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பு அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மி உயிரிழப்புகளுக்கு ஆளுநர் ரவிதான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கும் நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் 8 கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி கண்டனம்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உயிரிழப்புகளுக்கு ஆளுநர் ரவிதான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். 4 மாதங்களாகியும் தடை மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியதர்காக ஆளுநரை கண்டிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

3 நாட்களுக்கு முன் கண்டனம்
கடந்த 5 ஆம் தேதி ஆன்லைன் ரம்மியால் ஒருவர் தற்கொலை செய்தது தொடர்பாக அன்புமணி வெளியிட்டு இருந்த ட்விட்டர் பதிவில், "ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல்.

47 வது தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆளுநர் மக்களை அவமதிக்கிறார்
'ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களை காப்பதற்காவது அதை தடை செய்யுங்கள்' என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் ஆளுனருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல்.

போராட்டம் நடத்துவோம்
இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுனருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications