தந்தையை வேவு பார்த்த மகன்.. ஒட்டுக்கேட்பு கருவியை வைத்த அன்புமணி.. திட்டவட்டமாக சொன்ன ராமதாஸ்
சென்னை: தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணியை தவிர வேறு யாரும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் அமரும் இருக்கையில் இருந்து ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாமக தரப்பில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார் என்று கண்டுபிடிக்க காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார் என்பது தனக்குத் தெரியும் என்று ராமதாஸ் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனிடையே அன்புமணி பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், பாமக எனது கட்சி.. நான்தான் தலைவர். வியர்வை சிந்தி 96 ஆயிரம் கிராமங்களுக்குப் பயணித்து வளர்த்த கட்சி.
வேறு யாரும் பாமகவை உரிமை கொண்டாட முடியாது. நான் ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுக்குழுவை அறிவித்துள்ளேன். என்னால் செயல் தலைவர் என்று அறிவிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 9ல் பொதுக்குழு என்று கூறுகிறார். ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்றால், 15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கை அனுப்ப வேண்டும். பாமக பெயரில் வேறு ஒருவர் பொதுக்குழுவைக் கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டத்திற்கும் கட்சி விதிகளுக்கும் புறம்பானது.
உலகிலேயே தந்தையை உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால், இருக்கிறார். என்னை வேவு பார்த்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விழுப்புரம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். ஒட்டுக்கேட்பு கருவியை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். எங்கள் தரப்பில் தனியார் சிறப்புப் பிரிவு ஒன்றை நாடி, விசாரணை நடத்தி இருக்கிறோம்.
விரைவில் அந்த அறிக்கையும் கைகளுக்கு வரும். பாமக மகளிர் மாநாடு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அன்புமணி ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறார். என்னை சந்திக்கக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து அன்புமணி அறிவுறுத்தி இருக்கிறார். அந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வெறும் 8 பேர் மட்டுமே வந்தனர்.
இதனால் அவர்களின் இடத்திற்கு வேறு நிர்வாகிகளை நியமனம் செய்துவிட்டோம். அதேபோல் ஒட்டுக்கேட்பு கருவியை வேறு யாரும் எனது இருக்கையில் வைத்திருக்க முடியாது. தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி ஒரு இடத்தில் பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications