“தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது..” கன்னட மொழி சர்ச்சை! கமல்ஹாசனுக்கு அன்புமணி சப்போர்ட்!
சென்னை: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி, "அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி: தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்!

தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.
கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். "நடிகர் கமலுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. எங்கள் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார். இப்படி எதுவும் தெரியாமல் பேசக்கூடாது" என சித்தராமையா விமர்சித்திருந்தார்.
அதேபோல, "கமல்ஹாசன் 6.5 கோடி கன்னட மக்களின் சுயமரியாதையை அவமதித்துவிட்டார். அவரது பேச்சு அநாகரிகமாகவும், ஆணவத்தின் உச்சமாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல், மத உணர்வுகளை புண் படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்" என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கமல்ஹாசன் கறாராக கூறியுள்ளார். "தமிழ்நாடு அனைவருக்குமானது. இது பிற மாநிலங்களிலும் இருக்கலாம், நான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு மேனனும், ரெட்டியும், கன்னட ஐயங்காரும் பலரும் முதல்வராக இருந்திருக்கிறார்கள்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோதுகூட, 'எங்கும் செல்லாதீர்கள், இங்கே வாருங்கள்' என்று கன்னடர்கள் என்னிடம் சொன்னார்கள்.
வடக்கிலிருந்து பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் தென் குமரியிலிருந்து பார்த்தால், நான் சொல்வதே சரி. இதற்கு இன்னொரு கோணமும் இருக்கும். அதை வல்லுநர்களே சொல்ல வேண்டும். குடும்பத்தோடு இருக்கும் முடிவை எடுக்க வேண்டுமா, அல்லது வடக்கிலிருந்து வந்த மொழியை ஏற்க வேண்டுமா என்பதை அவர்கள் சொல்லட்டும். அன்பு என்றுமே மன்னிப்பு கேட்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications