விஜய் பெயரை எப்படி சரியாக எழுதுவது? கவிஞர் மகுடேசுவரன் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் பெயரை தமிழ் மொழி வழக்கப்படி எப்படி எழுதுவது என தமிழ் மொழி ஆர்வலரும், கவிஞருமான மகுடேசுவரன் விளக்கம் அளித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், முதல் முறையாக எதிர்வரும் சட்டசபை தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். அண்மையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. விஜய்யின் பெயர் இனி நாள்தோறும் செய்திகளில் இடம்பிடிப்பதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையில், விஜய்யின் பெயரை எழுதும்போது எப்படி எழுத வேண்டும் என இலக்கண விதிகளின் படி விளக்கியுள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

Poet Magudeswaran Explains Correct Way to Write TVK Leader Vijay s Name

கவிஞர் மகுடேசுவரன் தமது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போது செய்தியில் பெரிதாக அடிபடும் ஒரு பெயரை எழுதுவதில் நம் மக்கள் தடுமாறுகிறார்கள். விஜய் என்ற பெயர் மிகுதியாய் இடம்பெறுகிறது. விஜய்யை, விஜயை என இருவாறும் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். விஜய்யை என்று எழுதுவதா? விஜயை என்று எழுதுவதா? தமிழில் ஒரு பெயர்ச்சொல்லில் முதலிரண்டு எழுத்துகளும் குறிலாக இருக்கையில் மூன்றாவது எழுத்தாக ய் என்ற தனிமெய் வாராது. விஜய், அஜய், உதய் போன்றன வடசொற்கள்.

பிறமொழிச் சொல் என்பதனால்தான் இங்கே இருகுறிலடுத்து மூன்றாவதாக யகரமெய் வருகிறது. அதனால்தான் கலை, அலை, விலை, படை போன்றனவற்றைக் கலய், அலய், விலய், படய் என எழுதுவது தமிழ் மொழியியற்கைக்கு முற்றிலும் எதிரானது. நமக்குச் சிறப்பான ஐகார எழுத்து வரிசை இருக்கிறது. அய், கய், சய், தய், நய், பய், வய், லய் என எழுதவேண்டிய தேவையே இல்லை. அவற்றை ஐ, கை, சை, தை, நை, பை, வை, லை என எழுதிவிடுவோம். சொற்களுக்கு இடையில் மேற்சொன்னவாறு கய், சய், தய், நய் பயன்பாடுகளை எங்கும் பார்த்திருக்கவும் மாட்டீர்கள்.

வடசொற்கள் வருகையில் ஏனோ தெரியவில்லை, தொடக்கம் முதலே விஜய், அஜய், உதய், வினய் என்றே எழுதிப் பழகிவிட்டோம். அவ்வடசொற்களைத் தமிழியல்பின்படி உயர்திணை ஆண்பால் பெயர்ச்சொற்களாக்கவேண்டும் என்றால் அன் விகுதி சேர்த்து விஜயன், அஜயன், உதயன், வினயன் என்று ஆக்கியிருக்கலாம். முன்பு அப்படித்தான் ஆக்கிக்கொண்டிருந்தோம். அவ்வழக்கு அருகிவிட்டது. அன் விகுதியற்று விஜய், அஜய் என்றே பெயர் சூட்டுகிறார்கள்.

இப்போது அப்பெயர்களோடு தமிழ் வேற்றுமை உருபுகளைச் சேர்க்கையில் என்ன செய்வதென்று குழப்பம். விஜய் என்று எழுதினாலும் அது தமிழ் இயற்கைப்படி விஜை என்றே கருதப்படலாகும். அதனை விஜை+ஐ என்று எழுதப்படுவதாகக் கொள்ளவேண்டும். ஐயும் ஐயும் சேர்வதென்றால் இடையில் ய் என்ற உடம்படுமெய் தோன்றும். விஜை + ய் + ஐ = விஜையை என்றே ஆகும். விலையை, நிலையை, படையை என்பதனைப் போன்றது இது. வி(ஜை=ஜய்)யை என்பதுதான் ஓரளவுக்குத் தமிழியற்கைக்கு அருகில் வரும்.

பழகிவிட்ட வழக்காற்றின்படி விஜய் என்று எழுதுவது நிலைத்துள்ளமையால் 'விஜய்யை' என்றே எழுதவேண்டும். விஜயை என்று எழுதுவதற்கு இதுவே நெருக்கமான மாற்று. விஜய்யை, விஜய்யுடன், விஜய்யால், விஜய்யின் என்றே எழுதுவதுதான் ஓரளவுக்குப் பொருந்தும். இம்முறையில்தான்
ஐகாரத் திருத்த விரும்பிகள் இவ்வாறு எழுதிவிட்டார்கள் என்று தமிழார்வலர்கள் ஆறுதலடைய வாய்ப்பிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+