"டெல்லியின் மொகல் தோட்டத்தில் பூத்த கோவை மல்லிகை" - சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வைரமுத்து வாழ்த்து
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவரான சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15 ஆவது துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"இந்தியத் திருநாட்டின்
குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
என் வாழ்த்துப் பூக்களை
தூரத்திலிருந்தே தூவுகிறேன்
பெருமைக்குரிய பெருநாட்டின்
பெரும் பொறுப்பில்
ஒரு தமிழர் அமர்கின்றார்
என்ற பெருமிதத்தை
என்னால் மறைக்க முடியவில்லை
இந்தப் பொறுப்புக்கு வந்ததுமே
அவரது அரசியல்சார்பு அகன்று
ஒரு பொதுத்தன்மை பூத்துவிடுகிறது
ஒட்டுமொத்த இந்திய மண்ணின்
ஒவ்வொரு மாநிலத்துக்கும்
அவர் உரியவராகிறார்
என்றபோதிலும்
தமிழ் தமிழர் என்ற
காவல் தாண்டிய காதல்
எட்டிப்பார்க்கவே செய்கிறது
என்பதைத் தடுக்கமுடியவில்லை
அவர்தம் பதவிக்காலத்தில்
நாடு நன்மை காணட்டும்
பதவி அவரால்
பெருமை பூணட்டும்
டெல்லியின்
மொகல் தோட்டத்தில்
கோவை மல்லிகை பூத்திருக்கிறது
வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications