"தோண்டப்படும் பழைய ஃபைல்ஸ்!" போலீஸ் போட்ட புது பிளான்! பள்ளிகளுக்கு வந்த மிரட்டல்.. பின்னணியில் யார்
சென்னையில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்குக் கடந்த வியாழக்கிழமை காலையில் மெயில் ஒன்று வந்தது. மொத்தம் 13 பள்ளிகளுக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்குக் கடந்த வியாழக்கிழமை காலையில் மெயில் ஒன்று வந்தது. மொத்தம் 13 பள்ளிகளுக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் அமர வைக்கப்பட்ட நிலையில், போலீசாரும் வெடிகுண்டு வல்லுநர்களும் பள்ளிகளுக்கு விரைந்தனர்.
மிரட்டல்: மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு வல்லுநர்கள் சோதனை நடத்தினர். இருப்பினும், அங்கே வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மோப்ப நாய்களும் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டன. சோதனையில் அங்கே வெடிகுண்டு எதுவும் இருப்பது கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரிய வந்தது. இருப்பினும், இந்தத் தகவல் பரவியதால் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளிகளுக்குச் சென்றனர். இதனால் குழப்பமான சூழல் நிலவியது
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அப்போது பள்ளிகளுக்கு வந்த மெயிலை பார்த்த போது அனைத்தும் ஒரே ஐடியில் இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், அதில் இருந்த தகவல்களும் கூட ஒரே மாதிரி இருந்துள்ளது. அதாவது மிரட்டலாக இல்லாமல்.. வெடிகுண்டு இருக்கிறது.. எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சாதாரணமாகவே இருந்துள்ளது.
விசாரணை: இந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இப்போது மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை நடத்தும் நிலையில், மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறிய முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மெயில் அனுப்பிய நபர் வெளிநாடுகளில் உள்ள தனியார் இணையதள சேவையை, குறிப்பாக சுவிட்சர்லாந்து சேவையைப் பயன்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழைய லிஸ்ட்: ஒரே மெயில் ஐடியில் இருந்து பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அந்த ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பழைய குற்றவாளிகள் லிஸ்டையும் தயார் செய்யும் முயற்சியிலும் சென்னை போலீசார் இறங்கியுள்ளனர். அவர்களில் யாராவது மீண்டும் அதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பார்களோ என்று விசாரிக்கிறார்கள்.

மேலும், பொதுவாக இதுபோன்ற மிரட்டல்கள் தொலைப்பேசி மூலமாகவே வரும். ஆனால், இந்த முறை மெயில் மூலம் வந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அல்லது நாட்டின் வேறு பகுதியில் இதுபோல இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இண்டர்போல் உதவியை நாட முடிவு: இது ஒரு பக்கம் இருக்கச் சென்னை போலீசார் இந்த விவகாரத்தில் இண்டர்போல் உதவியை நாட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநில போலீசாரால் நேரடியாக இண்டர்போல் அமைப்பை நாட முடியாது என்பதால் நோடல் அதிகாரி மூலம் இண்டர்போலை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications