வாடகைக்கு வீடு எடுத்து..ஏசி அறையில் கஞ்சா செடி வளர்த்த கும்பல்..கையும் களவுமாக பிடித்த சென்னை போலீஸ்
சென்னை தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் வீட்டின் ஏசி அறையில் கஞ்சா செடி வளர்த்த கும்பலை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
சென்னை: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக குளு குளு வசதி கொண்ட ஏசி அறையில் கஞ்சா செடியை வளர்த்த கும்பலை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சூரிய ஒளி படாமல் தனி பிரத்யேக வசதியுடன் ஆய்வகம் போல கஞ்சா செடியை வளர்த்த அந்த கும்பல் ஒரு கிராம் கஞ்சாவை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்திருக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருந்தாலும் முழுவதுமாக போதைப்பொருட்களின் பயன்பாடு கட்டுக்குள் வந்த பாடில்லை. சட்ட விரோதமாக போதைப்பொருட்களை கடத்தல் கும்பல் கொண்டு வந்து இங்கு புழக்கத்திற்குள் கொண்டு வந்து விடுகின்றனர். இந்த கும்பலையும் ஒடுக்க கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

வீட்டின் ஏசி அறையில் கஞ்சா செடி
இந்த நிலையில், சென்னையில் ஒரு வீட்டிற்குள் கஞ்சா செடிகளை ஏசி அறைக்குள் வைத்து வளர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமான இந்த செயலில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து அந்த செடியில் இருந்து வரும் இலைகளை பொட்டலமாக மடித்து மதுபான பார்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

10 கஞ்சா செடிகள் வளர்ப்பு
இந்த தகவலின் பேரில் கஞ்சா வளர்த்து வருபவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கஞ்சா வாங்குவது போல நடித்து தனிப்படை போலீசார் பின் தொடர்ந்தனர். மாடப்பாக்கம் பகுதியில் உள்ள அந்த வீட்டை சோதனை செய்த போது வீட்டினுள் 4 அடி உயரத்தில் சுமார் 10 செடிகள் வளர்க்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டும் இன்றி கஞ்சா செடிகளை வளர்ப்பதற்காக எல்.இ.டி விளக்கு அமைத்து குளு குளு ஏசி வசதியும் செய்து கொடுத்து இருக்கின்றனர்.

சூரிய ஒளி படாமல் வளர்த்துள்ளனர்
வீட்டினுள் ஆய்வகம் போல அமைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நான்கு பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சக்திவேல் என்ற இளைஞர் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீடை வாடகைக்கு எடுத்து அறையை ஆய்வகம் போல தயார் செய்து கிரிப்டோ கரன்சி மூலமாக வெளிநாடுகளில் இருந்து உயர் ரக கஞ்சா செடிகளின் விதைகளை வாங்கி வீட்டிற்குள் சூரிய ஒளி படாமல் வளர்த்து வந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா செடிகளை சிலிக்கான் பைகளில் அடைத்து பதப்படுத்தி வைத்து சிறு சிறு பாட்டில்களில் கஞ்சா செடிகள் மற்றும் விதைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஒரு கிராம் ஆயிரம் ரூபாய்க்கு
அதேபோல் போதை மாத்திரைகளையும் மதுபான பார்களிலும் தெரிந்தவர்களுக்கு விற்று வந்துள்ளனர். உயர் ரக கஞ்சா செடிகளை ஒரு கிராம் ஆயிரம் ரூபாய்க்கும் போதை மாத்திரைகளை ரூ.300-க்கும் விற்பனை செய்துள்ளனர். தொடர்ந்து 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் ஆய்வகம் போல அமைக்கப்பட்டு இருந்த ஏற்பாடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு ஆய்வு நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications