சென்னையில் 4 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தல்.. இளைஞரை மடக்கி பிடித்த போலீஸ்.. 1 மணிநேர பரபர சம்பவம்
சென்னை: தாம்பரம் அருகே வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்ற நபரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பரபரப்பாக செயல்பட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்டுள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருமலை நகரை சேர்ந்தவர் வினோத். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆனவர்.
வினோத்துக்கு மகள் பெயர் வர்ஷா. இவருக்கு 4 வயது ஆகிறது. வர்ஷா தினமும் மாலையில் வீட்டு அருகே விளையாடுவது வழக்கம்.

ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி
அதன்படி இன்று மாலை சக குழந்தைகளுடன் வர்ஷா வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தார். இதற்கிடையே தான் அங்கிருந்த வர்ஷா மாயமானார். ஆட்டோவில் வந்த மர்மநபர் வர்ஷாவை கடத்தி சென்றார். இதனை விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் பார்த்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் வர்ஷாவின் தந்தை வினோத்திடம் தகவல் அளித்தனர்.

போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த வினோத், குழந்தை கடத்தபட்டது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். மேலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். குழந்தை கடத்தப்பட்டது பற்றி வயர்லெஸ் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மடக்கி பிடித்த போலீஸ்
மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றி போலீசார் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டனர். இந்நிலையில் எம்ஐடி பகுதியில் ரோந்து பணியில் குரோம்பேட்டை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சிறுமியை கடத்திய நபர் ஆட்டோவில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

யார் இந்த நபர்?
கைதான நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த சம்சுதின் (வயது 30) என்பதும், மதுபோதையில் அவர் வர்ஷாவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சம்சுதீனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி வர்ஷா கடத்தப்பட்ட அடுத்த ஒருமணிநேரத்தில் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். விரைந்து செயல்பட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications