'கவர்ச்சி மோசடி'.. 10 ஆயிரம் கோடியை வாரிசுருட்டிய ஆருத்ரா, ஹிஜாவு ஓனர்கள்.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
இந்த நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து மோசடி செய்ததாக தெரிகிறது.
சென்னை: மக்களிடம் பல ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு நிதி நிறுவனம், ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளை தேடப்படும் குற்றவாளிகளாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள், அறிக்கைகள் என எதற்கும் பதில் அளிக்காததால் இந்த அதிரடி அறிவிப்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, அந்த நிறுவனங்களிடம் தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் போலீஸாரிடம் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆசையை தூண்டிய விளம்பரம்
சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். தொலைக்காட்சிகள், வானொலிகள், பஸ்கள் என எங்கு பார்த்தாலும் இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள்தான் இருக்கும். இவ்வாறு பல லட்சம் ரூபாய் செலவு செய்து மக்களின் மனதில் ஆருத்ரா நிறுவனம் இடம்பிடித்தது. இதையடுத்து, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு அதிக வட்டி தருவதாக அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

ஏமாந்த மக்கள்
அதாவது, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.36 ஆயிரம் வீதம் 10 மாதம் பணம் தருவதுடன், 2 கிராம் தங்கக்காசு தருவதாகவும் ஆருத்ரா நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி அந்நிறுவனம் மக்களுக்கு பணம் வழங்கவில்லை.

ரூ.10 ஆயிரம் கோடி வரை மோசடி
இதுபோலவே, ஹிஜாவு அசோசியேட்ஸ நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 15 சதவீதம் வட்ட தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு விளம்பரம் செய்தது. இதை நம்பி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹிஜாவு நிறுவனத்தில் ரூ.800 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தனர். வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஐஎஃப் நிறுவனமும் இதே பாணியில் மக்களை ஏமாற்றியது. இவ்வாறு இந்த நிறுவனங்கள் மக்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகார்களின் பேரில் அந்நிறுவனங்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேடப்படும் குற்றவாளிகள்
இதனிடையே, , ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் சென்னை மேத்தா நகர் ராஜசேகர், விருதுநகர்மைக்கேல்ராஜ், திருவள்ளூர் முகப்பேர் கிழக்கு உஷா, ஐஎஃப்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேலூரை சேர்ந்த மோகன் பாபு, லட்சுமி நாராயணன் வேதநாராயணன், ஜனார்தனன், ஹிஜாவு நிறுவனத்தைச் சேர்ந்தபுது பெருங்களத்தூர் அலெக்ஸாண்டர், மகாலட்சுமி பரந்தாமன், அம்பத்தூரை சேர்ந்த சுரேஷ், பெங்களூரை சேர்ந்த இனியா, சென்னையை சேர்ந்த சுஜாதா காந்தா, அடையாறு கவுரி சங்கர்,வேளச்சேரியை சேர்ந்த சந்திர சேகரம் பிரிஸ்டில்லா, கலைச்செல்வி ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இவர்கள் அனைவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.

ஓனர்கள்
அதுமட்டுமல்ல, இந்த மோசடி நிறுவனங்களின் ஓனர்கள் பலர், வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறார்களாம்.. இவர்களை இண்டர்போல் உதவியுடன் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. இந்த 3 பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக இ-மெயில் அட்ரஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.. அதேபோல, இந்த 3 மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளின் போட்டோக்களையும் தமிழக போலீஸ் இப்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரை அணுகி தகவல் தெரிவிக்குமாறு தமிழக காவல்துறை வேண்டுகோளும் விடுத்துள்ளது.

சன்மானம்
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகவல் உறுதியானதாக இருப்பின், சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க சன்மானமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை உறுதி தெரிவித்துள்ளது.. அதுமட்டுமல்லாமல் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகள் சொல்லி, மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்காமல் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்து பயனடையுமாறும் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு மீண்டும் அட்வைஸ் தந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications