விஜய் ஆண்டனி வருத்தம்.. சென்னையில் இன்றைய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த போலீஸ்.. என்ன காரணம்?
சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் இசைக்கும், அவரது நடிப்புக்கும் கூட ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

குறிப்பாக அவரது இசைக்கு இன்னும் அதிக ரசிகர்கள் உள்ளன.ஆனால் விஜய் ஆண்டனி நடிக்க வந்துவிட்டால் அவரது இசையில் வெளியாகும் பாடலை மிஸ் செய்வதாக ரசிகர்கள் வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தான் இசை ஜாம்பவான்களான இளையராஜா, தேவா, ஏஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டவர்களை போல் விஜய் ஆண்டனியும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவரது இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை மீனம்பாக்கத்தில் இன்று விஜய் ஆண்டனியின் 3.0 லைவ் கான்செர்ட் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும் போலீசாரிடம் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் போலீசார் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் 20 ஆயிரம் பேர் கூடினால் பாதிப்புகள் ஏற்படும் எனவும், உரிய வசதிகள் செய் முடியாது எனவும் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தேதி விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛சில எதிர்பாராத காரணங்களினாலும் மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இன்று நடைபெற இருந்த விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி புதிய நிகழ்வு பிரமாண்டமாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications