கபாலீஸ்வரர் கோவில் முன் பற்றிய நெருப்பு.. பதறிய மயிலாப்பூர்.. நடவடிக்கை பாயும் என சேகர்பாபு உறுதி
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் தீ வைத்த மர்ம நபரை தேடி வரும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை பாயும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. மயிலையே கயிலை என்று போற்றப்படும் பெருமைக்குரியது. இங்கு மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டு காலமாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றி சர்ச்சைகளும் வந்து கொண்டுதான் உள்ளது.

மயிலாப்பூர் கோவிவில் இருந்த மயிலை காணவில்லை என்று ஆண்டுக்கணக்கில் தேடி வந்தனர். அது ஓய்ந்த பின்னர் கோவிலுக்குள் இரண்டு பேர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். அந்த சம்பவம் பக்தர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சைபர் கிரைமில் புகார் அளித்த பிறகு நடனமாடிய இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்.
இந்தநிலையில்தான் கபாலீஸ்வரர் கோயிலின் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் செவ்வாய்கிழமையன்று நள்ளிரவு மர்ம நபர்கள் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக கோயிலின் கதவு சேதம் அடையவில்லை. கோயிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.
இதையடுத்து அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையில் போலீஸார் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது கோயில் பாதுகாவலர்கள் யாரும் அங்கு இல்லை என்றும், கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
மது போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தீ வைத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாயளர்களிடம் பேசிய இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோயில் வாசலில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி அடிக்கடி எழும் சர்ச்சைகள் சிவ பக்தர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications