தயாரான ஹிட்லிஸ்ட்! இனி ரவுடிகளின் தூக்கமே போச்சு.. தட்டித் தூக்கப் போகும் போலீஸ்! பரபரப்பில் ‘சவுத்’
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் ரவுடிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 1700க்கும் மேற்பட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையில் தொடர் கொலை சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்து நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல் சேலம், நெல்லை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்ததால் தமிழக சட்ட ஒழுங்கு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதை அடுத்து காவல்துறையில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டது போல தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் கூலிப்படை மற்றும் மோதல்களை தவிர்க்கும் வகையில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதன்படி தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
ஏ+, ஏ, பி+, பி, சி என குற்றங்களின் தன்மை அடிப்படையில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியில் சுமார் 1750 பேர் இருக்கும் நிலையில், அவர்களில் சுமார் 1300 பேர் சிறையில் இருக்கும் நிலையில், 400 பேர் பல்வேறு காரணங்கள் காரணமாக வெளியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரௌடிகள் பட்டியலில் உள்ள 400 நபர்களை கண்காணிக்க தலா போலீசார் விதம் ஷிப்ட் படி நியமிக்கப்பட இருக்கின்றனர்.
24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள், யார் யாரிடம் பேசுகிறார்கள் என 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் சிறையில் இருக்கும் ரவுடிகளில் குறித்த வழக்குகளும் மீண்டும் தூசி தட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரௌடிகளுக்கு உதவினாலோ அடைக்கலம் கொடுத்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications