தாராளமா போலீஸ் கஸ்டடிக்கு அனுப்புங்க.. கோர்ட்டில் மகாவிஷ்ணு சொன்ன வார்த்தை! உடனே நீதிபதி போட்ட ஆணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர். போலீஸ் காவலில் அனுப்ப ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணு. இதையடுத்து 3 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு, பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருடன் மகாவிஷ்ணு வாக்குவாதமும் செய்துள்ளார்.

mahavishnu spiritual speaker court

இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை தவறாக வழிநடத்துவதா என கேள்வி எழுப்பி, அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இதற்கிடையே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினனர். இதையடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சைதாப்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் போலீஸார் தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதேசமயம், மகாவிஷ்ணு தரப்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தியால் பேட்டை பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் மாற்றுத்திறனாளியான வடிவேலன் என்பவர் சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகுவதாக அறிவித்தார். மேலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றார்.

காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், வழக்கில் தானே வாதாடி கொள்வதாகவும் மகாவிஷ்ணு நீதிபதியிடம் தெரிவித்தார். அதோடு, போலீஸ் காவல் கேட்ட மனுவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் நீதிபதியிடம் மகாவிஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+