லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு என்ன காரணம்?.. ஹைகோர்ட்டில் போலீஸ் தகவல்
சென்னை: லியோ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை படத் தயாரிப்பு நிறுவனமே ரத்து செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்ததினம் ஆகிய நிகழ்வுகளையொட்டி வரும் 29 ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த வேண்டும் என கடந்த மாதம் 20ஆம் தேதியே காவல் துறையில் ஆர்எஸ்எஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என்பதால் அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த வாரம் அளித்த மனுவை பரிசீலிக்காமல் வைத்திருந்துவிட்டு கடைசி நேரத்தில் நிராகரிக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் காவல் துறை இது போலவே செய்கிறார்கள் என்றார். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பேரணிக்கு அனுமதி கோரும் பாதையில் மசூதிகள், தேவாலயங்கள், பிற அரசியல் அலுவலகங்கள் உள்ளன என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு அதற்காக இந்த பகுதியில் யாரும் நடக்கக் கூடாது என கூறிவிட முடியுமா என கேட்டார்.
ஆர்எஸ்எஸ் அளித்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இது போன்ற நிகழ்ச்சிகளின் போது தடை விதிக்காமல் கட்டுப்பாடுகளை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு விதிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறும் இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் இருந்தால் அங்கு போலீஸார் பாதுகாப்போடு அணிவகுப்பு நடத்தி அனுமதிக்கலாம் என்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி, லியோ இசை வெளியீட்டு விழா ரத்து உள்ளிட்ட விஷயங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி நீதிபதி பேசியிருந்தார். அதற்கு காவல் துறை சார்பில் பதில் அளிக்கையில் லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தாமாகவே தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின் போது போலி டிக்கெட்டுகள் மூலமாக ரசிகர்கள் குவிந்து குளறுபடி ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி போல் அல்லாமல் லியோ ஆடியோ லாஞ்சை கவனமாக நடத்த அறிவுறுத்தினோம் என பதில் அளித்தனர்.












Click it and Unblock the Notifications