சென்னையில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்பு.. பரபர தகவல்!
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்து 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி உள்பட 5 பேரை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் 5 பேரையும் கொத்தடிமைகளாக வைத்திருந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ரஷிதா (வயது 49). இந்த நிலையில் ரஷிதாவின் வீட்டில் குழந்தை தொழிலார்கள் உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் விஏஓ தங்கபாண்டியன் என்பவர் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து போலீசார் திருப்பதி நகரில் வசித்து வரும் ரஷிதாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி உள்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி மற்றும் ரேஷ்மா (20), சபாபதி ராதா (34), சந்தியா (20) ஆகிய 5 பேரை மீட்டனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ரஷிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 17 வயது சிறுமி 3 ஆண்டுகள் பணிபுரிவதற்காக 3 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும், ரேஷ்மா என்ற பெண் 6 ஆண்டுகள் பணிபுரிய ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்தார்.
சென்னையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 பேர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications