டூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ.! உணவை சாப்பிட்டதும் கொடூரம்! அம்பத்தூரில் அலறல்
சென்னை: சென்னை அருகே சாப்பிடும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் அம்பத்தூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர்.
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏதாவது ஏற்பட்டதா, இல்லை உணவு தொண்டையில் சிக்கி சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி இறந்து போனாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தொண்டையில் உணவு சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். கடந்த 2018ஆம் ஆண்டு புதுவையில் தெருவோரக் கடையில் இட்லி சாப்பிட்ட நபருக்கு தொண்டையில் உணவு சிக்கியதில் அவர் பலியானார். அது போல் நாகர்கோவிலில் தொண்டையில் இட்லி சிக்கி 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகிவிட்டார்.
சென்னையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தொண்டையில் திடீரென பரோட்டா சிக்கியது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பொதட்டூர்பேட்டை அருகே தொண்டையில் இட்லி சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலியாகிவிட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாப்பாட்டிற்கு பரோட்டாவும் முட்டை கறியும் சமைத்து சாப்பிட்ட போது தொண்டையில் உணவு சிக்கி அந்த பெண் மரணமடைந்தார். அது போல் கடந்த ஜூலை மாதம் கேரளவில் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அந்த உணவு சிக்கி அவர் பலியாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications