சசிகலா, ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஓவர்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தந்த ‛மெசேஜ்’.. கவனிச்சீங்களா?
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட் இன்று வெளியானது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் 2வது இடம் பிடித்தது. அதிமுக புறக்கணித்த நிலையில் சசிகலா, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் எதிர்காலம் என்பது ஓவராகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமான நிலையில்கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சி அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. கடந்த 10ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் மொத்தம் 82.9 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து இன்று பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார்.
கடைசியில் அன்னியூர் சிவா மொத்தம் 124053 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் சி அன்புமணி 56296 ஓட்டுகள் மட்டுமே வாங்கி தோல்வியடைந்தார். அன்னியூர் சிவா 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாம வேட்பாளர் சி அன்புமணியை வீழ்த்தினார். தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டெபாசிட் இழந்தார். அவர் வெறும் 10,602 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அபிநயா உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர். பாமக வேட்பாளர் தோற்றாலும் டெபாசிட் வாங்கினார்.
இந்த தேர்தலில் அதிமுக களமிறங்காத நிலையில் அந்த ஓட்டுகள் யாருக்கு செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தொகுதியில் வழக்கத்தை விட அதிகளவு ஓட்டுப்பதிவானதன் மூலம் அதிமுகவினர் ஓட்டளித்து இருப்பதும், அவர்கள் பாமக, நாம் தமிழரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஓட்டளித்துள்ளதால் தான் அவர் 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அரசியலில் ஓரம் கட்டப்பட்டுள்ள சசிகலா, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் எதிர்காலம் என்பது முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவும் ஆளும் கட்சிக்கு சாதகமாக வரும் என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் விமர்சனம் செய்ததோடு, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் சசிகலா, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்து வருகிறார்.
இதனால் சசிகலா, ஓ பன்னீர் செல்வத்தை எக்காரணம் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அரசியல் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை. மேலும் இந்த தேர்தலில் அதிமுகவின் ஓட்டு என்பது திமுகவுக்கு பதில் பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அதிகம் செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் லோக்சபா தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியை தவிர்த்து பாஜகவுடன் சேர்ந்தது தான். இதனால் விக்கிரவாண்டி அதிமுகவினர் பாமகவுக்கு ஓட்டளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தால் அந்த வேட்பாளர் வெல்ல வாய்ப்பு இல்லை என்பதால் அனைவரும் பாமக வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கும் நோக்கில் திமுகவுக்கு ஓட்டளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் இந்த பல அதிமுக நிர்வாகிகள் பாமகவுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை நிர்வாகிகள் அப்படியே ஃபாலே செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் அதிமுக தலைமையிடம் இருந்த விக்கிரவாண்டி நிர்வாகிகளுக்கு அதற்கான சிக்னல் என்பது போயிருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பார்த்தால் அதிமுக தலைமை சொன்னதை தொண்டர்கள் கேட்டு செயல்பட்டுள்ளதாக நாம் புரிந்து கொள்ளலாம். இதனால் இன்னும் எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் அதிமுகவின் ஓட்டு வங்கி உள்ளதை நம்மால் புரிய முடியும்.
அதோடு அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கூட தொண்டர்கள் எடப்பாடி பக்கம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இது தான் சசிகலா, ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. ஏனென்றால் சசிகலா வரும் 17 ம் தேதி தென்காசியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் தற்போதைய சூழலில் சசிகலா எந்த வகையான சுற்றுப்பயணம் செய்தாலும் கூட அதிமுகவில் இருந்தால் மட்டுமே செல்வாக்கோடு வலம் வர முடியும். மாறாக தனிக்கட்சி தொடங்கினால் நிர்வகிப்பது சிரமம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதேபோல் ஓ பன்னீர் செல்வம் சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னமான பலாப்பழத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் அதிமுக மற்றும் திமுக கூட்டணியின் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்படி பாஜக கூட்டணியில் அவர் களமிறங்கியதை சுட்டிக்காட்டி தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு என்பது இல்லாமல் தான் இருக்கும். இதனால் அவர் மாற்று கட்சியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் தனி அணியாக செயல்பட வேண்டும். தனி அணியாக அல்லது புது கட்சி தொடங்கி அதனை வலுப்படுத்தி அரசியலில் ஜொலிப்பது கடினம். பிற கட்சியில் இணைந்தாலும் ஓ பன்னீர் செல்வத்துக்கு உரிய மரியாதை கிடைக்குமா? என்பது கேள்விக்குறி. இதனால் சசிகலா, ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்பது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications