பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த சமூக போராளி 'டிராபிக்' ராமசாமி.. கனிமொழி, ஓபிஎஸ் இரங்கல்
சென்னை: இன்று உடல்நலக் குறைவால் காலமான சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிராபிக் ராமசாமி இன்று மாலை 7.45 மணியளவில் காலமானர்.
87 வயதான அவர், பல பொதுநல வழக்குகள் மூலம் அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர். பேனர் கலாசாரம் முதல் சென்னையில் பார்கிங் சிக்கல் வரை அவர் தொடர்ந்த பல பொதுநல வழக்குகள் சமூகத்திற்கு தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
|
கனிமொழி இரங்கல்
இந்நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில், "டிராபிக் ராமசாமியின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பொதுநல வழக்குகள் வரை சமூகத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது
இவர் தொடுத்த பொதுநல வழக்குகள் பல முக்கியமான தீர்ப்புகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன. பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டத்தக்கது. அவரது மறைவிற்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
|
ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், "முதுமையிலும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்த சமூகப் போராளி டிராபிக் ராமசாமி, இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி இரங்கல்
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, டிராபிக் ராமசாமி பல முதலமைச்சர்களையும் எதிர்த்து தைரியமாகப் போராடியவர். டிராபிக் ராமசாமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன். "டிராபிக் ராமசாமி" என்ற அடைமொழிக்கு ஏற்ப சாலையோரங்களில் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனங்களைச் சிதறடித்த பெரிய பெரிய பதாகைகளை அகற்றுவதற்கு, பல முதலமைச்சர்களையும் எதிர்த்து தைரியமாகப் போராடியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வலியுறுத்துகிறேன் என இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

கமல் இரங்கல்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டரில், "அநீதிகளை துணிச்சலாக எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் மூலம் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நீதிக்காக அயராது போராடிய டிராபிக் ராமசாமிக்கு என் அஞ்சலிகள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications