எளிமையானவர்... தன்னடக்கம் மிக்கவர்... அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!
சென்னை: வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவு செய்தியறிந்து பெரும் துயருற்றதாக ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஸ்டாலின் புகழாரம்
சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் - துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அ.தி.மு.க.விற்கும் - சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும். மாண்புமிகு அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வு
பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி - தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தன்னடக்கம் மிக்கவர்
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர்.

இரங்கல் அறிக்கை
அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
