ஸ்டாலின் கையில் எடுத்த செம வியூகம்.. முஸ்லீம் லீக்கை முதலில் அழைத்தது ஏன்? பின்னணியில் மாஸ் பிளான்!
சென்னை: திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அக்கட்சிக்கு 2 சீட் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஐ.யூ.எம்.எல் கட்சியை முதலில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது திமுக தலைவர் ஸ்டாலினின் சூப்பரான வியூகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திமுகவின் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை குழு டிஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர், திமுகவிடம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று நடத்தினர். முதல் கட்சியாக திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது ஐ.யூ.எம்.எல்.
முஸ்லீம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் திமுக இரண்டு தொகுதிகளை தர முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் முஸ்லீம் லீக் 3 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அனைத்து இடங்களிலுமே அக்கட்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைப் பொறுத்தவரை, நீண்டகாலமாகவே திமுக கூட்டணியில் தொடர்ச்சியாக இருந்து வரும் கட்சி. தொகுதி உடன்பாட்டில் சிக்கல் தராத கட்சி. கடந்த முறை அக்கட்சிக்கு 3 சீட்டுகள் கொடுக்கப்பட்ட நிலையில் 3லும் தோல்வி அடைந்திருந்தது.
ஸ்டாலின் ஸ்மார்ட் கணக்கு
இப்போது, அதில் ஒரு தொகுதியைக் குறைத்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளும். ஐ.யூ.எம்.எல் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிட்டு, கூட்டணிக்கு புதிய கட்சிகளின் வரவைக் குறிப்பிட்டும் அடுத்தடுத்து, பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகளிடம் சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை முடித்து விடலாம் என்ற கணக்கு திமுக தலைமைக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, முஸ்லீம் லீக் கட்சி ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்ததால், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஒரு தொகுதியை விட்டுத் தரலாம். புதிய கட்சிகளின் வருகையை கருத்தில் கொண்டு, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளும் கடந்த முறை போட்டியிட்ட எண்ணிக்கையிலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளும். இந்த கணக்கின் அடிப்படையிலேயே முஸ்லீம் லீக்கை முதலில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
கூட்டணிக்காக சீட் தியாகம்
அதற்கு அடுத்தபடியாக, நாளை மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக. இந்தக் கட்சிகளும், தொகுதிகளை தியாகம் செய்ய ஒப்புக்கொள்ளும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தொகுதி எண்ணிக்கை குறைக்க ஒப்புக்கொள்ளாத கட்சிகளை லேட்டாக வர வைத்து உள்ளார் ஸ்டாலின்.
காதர் மொகிதீன் பேட்டி
இன்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொகிதீன் பேசுகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைத்தோம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக யாரும் கருதக்கூடாது. இது ஒரு சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சி. தமிழ்நாட்டில் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஜமாத்துகள் என்கிற அமைப்பு சமுதாயம். அந்த சமுதாயத்தைப் பிரதிபலிக்கக் கூடியது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
தமிழ்நாட்டில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளைத் தர வேண்டும் என கலைஞரிடம் கேட்டோம். ஏன் என கலைஞர் கேட்டார்.. அதற்கு, 234 தொகுதிகளிலும் நாங்க இல்லாத தொகுதிகளே கிடையாது. 2,000 வாக்குகளில் இருந்து 65,000 - 70,000 வாக்குகள் அளவுக்கு எங்க சமுதாய ஓட்டுகள் இருக்கு என்கிற அடிப்படையில் தான் இதைக் கேட்கிறோம் என்று சொன்னோம்.
5 கேட்டோம்
அதே மாதிரி முஸ்லீம் லீக்கிற்கு கலைஞர் 5 தொகுதியை கொடுத்துப் பெருமைப்படுத்தினார். இப்போதும் நாங்கள் 5 தொகுதிகளைக் கேட்கிறோம். குறைந்தபட்சம் 5 கொடுக்கவில்லை என்றாலும் 4 தொகுதியாவது கொடுத்தால் நல்லா இருக்கும் என வலியுறுத்தி இருக்கிறோம்.
திமுக குழு, தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம் சமுதாயம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை திமுக ஆட்சி தொடரவேண்டும் என்ற அடிப்படையில் எல்லா காரியங்களையும் நீங்கள் செய்வதற்கு நன்றி செலுத்துகிறோம். உங்களுக்கு சென்ற முறை நாங்கள் 3 தொகுதிகளைக் கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.
2 சீட் தர திமுக முடிவு
மேலும், கூட்டணியில் புதிய கட்சிகளையும் நாம் இணைக்க வேண்டியிருக்கிறது. அதனால்ல் நாங்களும் தொகுதிகளை தியாகம் செய்யப் போகிறோம். அது மாதிரி கூட்டணிக் கட்சிகளும் விட்டுக் கொடுத்தால் நல்லா இருக்கும். கடந்த முறை 3 தொகுதிகள் கொடுத்தோம், அதில் ஒன்றை விட்டுக் கொடுக்கவேண்டும் எனக் கூறினார்கள். நாங்கள் எந்த முடிவும் சொல்லவில்லை..
ஏணிச் சின்னத்தில்தான் போட்டி
ஏணிச் சின்னம் எங்களுடைய சின்னம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியா அளவில் உள்ள ஒரு கட்சி. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி. அதனால் ஏணிச் சின்னம் எப்போதும் இருக்கும். சின்னம் இல்லாதவர்கள் திமுக சின்னத்தில் நிற்கலாம். எங்களைப் பொறுத்தவரைக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஏணிச் சின்னத்துலதான் போட்டியிட்டோம், போட்டியிடுவோம்.
திமுக குழுவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. எந்தப் பிரச்சனையும் கிடையாது. தேர்தல் காலங்களில் கூடுதல் தொகுதி கேட்கிறது, குறைச்சுக் கொடுக்கிறது இது இயல்பு. என்றைக்கும் திமுக கூட்டணியில்தான் இருப்போம். அவங்க நாலு தொகுதி கொடுக்கறாங்களா, மூணு தொகுதி கொடுக்கறாங்களா, இல்ல ரெண்டு தொகுதி கொடுக்கப் போறாங்களா.. ஒண்ணும் இல்லன்னு சொல்லப் போறாங்களாங்கிற கொஸ்டினே கிடையாது. எது சொன்னாலும் நாங்க அங்கதான் இருப்போம். அது எங்களுடைய முடிவு. கலந்து பேசிவிட்டு மீண்டும் வந்து சந்திப்போம்" எனத் தெரிவித்தார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications