திமுக மீது பழியை போடும் அதிமுக.. விஜய்க்கு அரணாக நிற்கும் எடப்பாடி! கரூரில் பேசியதை கவனிச்சீங்களா?
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். விபத்து நேரிட்ட உடன் முதலமைச்சர் தொடங்கி அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் களத்துக்கு வந்த நிலையில் விஜய் காப்பாற்றுவது போல் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் அரசியல் பிரச்சார கூட்டத்தை நடத்தினார். இந்த பிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மிகப்பெரிய துயரச் சம்பவமாக மாறியுள்ளது.
திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இரவோடு இரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கரூர் விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கரூர் சென்று உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசல் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. விஜயின் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் இறப்புகளை தடுத்திருக்கலாம்" என கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு நடிகர் விஜய்க்கு அரணாக இருப்பது போலவும், அரசு மீது குற்றம் சாட்டும் வகையிலேயே இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. நேற்று இரவு விபத்து நடந்ததும் சென்னையில் உடனடியாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், ஆறுதல் மற்றும் நிதி உதவியை அறிவித்தார். இரவோடு இரவாக சிறப்பு விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து கரூர் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக அமைச்சர்கள், முன்னால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். இரவோடு இரவாக உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வையும் பார்க்க முடிந்தது. இப்படி அரசு துரிதமாக செயல்பட்டு நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் கட்சி ஆரம்பித்ததில் இருந்து திமுக எதிர்ப்பையே விஜய் பிரதானமாக கொண்டிருக்கிறார். அதிமுகவின் நிலைப்பாடும் அதுதான். நேற்றைய பிரச்சாரத்தில் கூட விஜய் முழுமையாக திமுகவை குறி வைத்தே பேசினார்.
பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவை பற்றி பேசவே இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வாய்ப்புக்காக விஜயை விமர்சிக்காமல் விடுவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் திமுக அமைச்சரவையில் மிகப் பலம் பொருந்திய அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது அமைச்சர் பதவியில் இல்லை என்றாலும் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தின் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜி இருக்கும் நிலையில் அவரை விஜய் டார்கெட் செய்து வருவதை அதிமுக விரும்புகிறது .எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் திமுகவை எதிர்க்கும் விஜயை, அரசியல் நண்பனாக்கிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications