தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு.. யாருக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும்?
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ. 163.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய விழாவின் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் போனஸ்:
அதன்படி 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 163 கோடி ஒதுக்கீடு:
அதேபோல சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்த முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சரும் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு:
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களைக் கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.
யாருக்கு எவ்வளவு போனஸ்:
இந்த உத்தரவின்படி
1) 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
2) தொகுப்பூதியம். சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லறைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3) "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள். கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications