குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு ரூ.5000.. போஸ்டர் மூலம் பரிசு கேட்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று அன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தியிருந்தார்.. அதேபோல இப்போது ஸ்டாலின் ஆட்சியை விட்டு போகும் முன்பு. 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகுப்பு தரவேண்டும்' என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் இந்த கோரிக்கையானது மிகுந்த கவனத்தை தமிழகத்தில் பெற்று வருகிறது.
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகை பொங்கல், மதங்களை தாண்டி அனைவராலும் கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். ஒவ்வொரு வருடமும் இந்த காலத்தில், தமிழ்நாட்டில் அரசு பொதுமக்களுக்கு சிறிய பரிசுகள் வழங்குவது வழக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில், சில நேரங்களில் பண பரிசுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன..

அதிமுக ஆட்சிகாலம்
அதிமுக ஆட்சிக்காலத்தில், 2021ல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்டது. இதுவே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம் ஆகும். அதன் பிறகு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இதுவரை வழங்கப்படாத ரொக்கத்தை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.. மேலும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது..
மகளிர் உரிமைத் தொகை
ஆனால், மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்படுவதால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டதுமே, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜனவரி 10ம் தேதிக்கு முன் விநியோகிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ரூ.5000 பரிசுத் தொகை சர்ப்ரைஸ்
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல், ரூ.,5000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தமிழக பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் அரசு பொங்கல் பண்டிகையின் போது, 5000 ரூபாய் வழங்கினால் எங்களுடைய கோரிக்கையினால் தான் ₹5000 கிடைத்தது என பிரச்சாரம் செய்யவும், ஒருவேளை அரசு வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கவில்லை? என பொதுமக்கள் இடம் அதிருப்தியை ஏற்படுத்தவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதன்ஒரு பகுதியாக இன்று ராயப்பேட்டை பகுதிகளில் அதிமுகவினர் பொங்கல் தொகுப்புடன் 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி போஸ்டர்கள்
திமுக ஆட்சி முடியப்போகும் கடைசி கால கட்டத்திலாவது மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் 5,000 ரூபாய் தைப் பொங்கலுக்கு திமுக அரசு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வரும் நிலையில், இந்த ரூ.5000 குறித்த போஸ்டர்கள் சென்னை மக்களின் கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications