சர்ப்ரைஸ் ரேஷன் ஊழியர்களுக்கு.. கேட்டதுமே கிடைத்த பொங்கல் ஊக்கத்தொகை! கூட்டுறவுத்துறை சபாஷ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை தரப்பிலிருந்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரு ரேஷன் கடைக்கு சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதன் மூலம், விற்பனையாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் சுமார் ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை ஊக்கத்தொகையாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.
பொங்கல் பரிசு: அதுமட்டுமல்லாமல், இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு என்பது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது..
அந்தவகையில், 2.2 கோடி ரேஷன்தாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.. இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் பணிகள்: இதனிடையே ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.. அதாவது, அதிக காலி பணியிடங்களால் ஒரு ஊழியரே, இரண்டு - மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டியிருக்கிறதாம்..
மேலும், கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை ஊழியர்கள் தங்களது சொந்தச் செலவில் மேற்கொண்டதால் ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா 500 ரூபாய் என ஐந்து நாட்களுக்கு 2,500 ரூபாய் செலவு ஏற்பட்டதாகவும், எனவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ரேஷன் கடை ஊழியர்கள்: இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.. மேலும், கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும், பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் இந்த ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை வழங்க, அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இந்த உத்தரவு குறித்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வைத்திருக்கிறார்..
சுற்றறிக்கை: அந்த சுற்றறிக்கையில், "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, ஒரு கார்டுக்கு 50 காசு வீதம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை வழங்கி, அந்த தொகை ரேஷன் ஊழியர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துவந்தாலும், கார்டுக்கு 5 ரூபாய் கேட்டால், வெறும் 50 காசு ஊக்கத்தொகை தரப்பட்டுள்ளது, இதை சற்று உயர்த்தி வழங்கினால் இன்னும் உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார்களாம்.












Click it and Unblock the Notifications