ஜல்லிக்கட்டு போட்டிகளில் சோகம்.. சும்மா வேடிக்கை பார்க்க போன 6 பேர் காளைகள் முட்டி பலி!
சென்னை: மதுரை, வேலூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேருமே ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், கரும்பு, புத்தாடையுடன் நினைவுக்கு வருவது தமிழர்களின் மற்றொரு அடையாளமான ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டம் சூரியூர், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், காளைகளின் திறமையையும், வீரர்களின் திறனையும் பரிசோதிப்பவை. மாடுபிடி வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்குவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்களாகச் செல்பவர்களை மாடு குத்தும் நிகழ்வுகள் ஏராளம். இந்த ஆண்டும் அப்படி, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா போட்டிகளின்போது பார்வையாளர்களாகச் சென்ற சிலர் பலியாகியுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த செல்வராஜ் (68) என்பவர் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த மாட்டின் கயிறு பார்வையாளராக நின்றுகொண்டிருந்த செல்வராஜின் காலில் சிக்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி ஊர்களில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இருவர் பலியாகினர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி கொண்டையம்பள்ளி, உலிபுரம், நாகம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி சிறிய அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கொண்டையம்பள்ளியில் நடந்த ஜல்லிக்கட்டில் அதே ஊரில் வடக்கு தெரு பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஜெகதீஷ் மனைவி வினிதா (31 )என்பவர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க தனது கை குழந்தையுடன் சென்றபோது மாடு முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் செந்தாரப்பட்டி தேர்முட்டி தெருவில் வசிக்கும் சின்னத்தம்பி மகன் சக்திவேல் (26) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்கச் சென்றபோது காளை முட்டி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் எருது விடும் விழா முடிந்து காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் ஓட்டிச் சென்றபோது, காளை ஒன்று திடீரென கோபமடைந்து, பார்வையாளர்கள் மீது மோதி, மேட்டூரைச் சேர்ந்த 58 வயது விவசாயி ராஜ்குமாரை கொம்பால் குத்தியது. இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கனார் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான திலகர் என்பவர் ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூர் மாவட்டம் அரியூர் கோவிந்தரெட்டிபாளையத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவின் போது பலியானார். திலகர் தனது மகளுடன் அரியூருக்கு பொங்கல் கொண்டாட வந்த நிலையில் அங்கு காளை அவிழ்த்து விடும் விழாவைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது காளை ஒன்று திலகரைக் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எம்.சவலூர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான இளவரசன் என்பவர் சனிக்கிழமை மாலை காவேரிப்பட்டணம் அருகே ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, காளை ஒன்று குத்தியதில் பலியானார். உயிரிழந்த இளவரசன் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்.












Click it and Unblock the Notifications