பொங்கலுக்கு ஊருக்குப் போறீங்களா? இன்று காலை 8 மணி ரொம்ப முக்கியம்! நோட் பண்ணிக்கோங்க மக்களே!
சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழக்கமான ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில் தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த நிலையில் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊருக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்காக தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் சென்னையிலும், பெரிய நகரங்களிலும் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கலைக் கொண்டாட திட்டமிடுகின்றனர்.

ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைந்து விட்ட நிலையில், பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் மொத்தம் ஐந்து புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று, அதாவது ஜனவரி 8-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
பொங்கல் சிறப்பு ரயில்
எனவே ஊருக்கு செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் முன்பதிவை தவறவிடாமல் சீக்கிரமே செய்துகொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதே நாளில் மதியம் 2 மணியளவில் தாம்பரத்தை அடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயில் அதே தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணியளவில் நெல்லையை சென்றடையும். இதனுடன், ஜனவரி 14ஆம் தேதி திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே கூடுதல் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி ரயில்
மேலும் திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக தாம்பரத்தைச் சென்றடையும் சிறப்பு ரயிலும் ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் இயக்கப்படும். தூத்துக்குடி பயணிகளுக்காகவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், சேலம், நாமக்கல் வழியாக தூத்துக்குடியைச் செல்கின்ற சிறப்பு ரயில் ஜனவரி 12 மற்றும் 19ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது. திரும்பும் பயணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி ஜனவரி 13 மற்றும் 20ஆம் தேதிகளில் ரயில் புறப்படும்.
முன்பதிவு தொடக்கம்
இதற்கிடையில், போத்தனூர் - சென்னை இடையே அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பண்டிகை நெரிசல் காரணமாக கடைசி நேரத்தில் டிக்கெட் தேடி தவிக்காமல் இருக்க பயணிகள் இந்தச் சிறப்பு ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு ரயில்வே
பொங்கல் காலங்களில் ரயில் பயணம் செய்வது நேரமும் செலவும் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகமாக ரயிலையே தேர்வு செய்து வருகின்றனர். இதனால் முன்பதிவுகள் வேகமாக நிரம்பும் சூழல் உருவாகிறது. எனவே இன்று காலை 8 மணிக்கே முன்பதிவு தொடங்கப்படுவதை நினைவில் கொண்டு, திட்டமிட்ட பயணங்கள் இருப்பின் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுவது பயணிகளுக்கு அதிக வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications