பொன்முடி விடுதலை.. 14 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த செம்மண் குவாரி வழக்கில் பரபர தீர்ப்பு!
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி ஆகியோரை விடுவித்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியின்போது, உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கவுதம் சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த 2023 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். ரெய்டை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர்.
செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக கிடைத்த பெரிய தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையே செம்மண் குவாரி முறைகேடு வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் 57 பேரில் 30 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இந்நிலையில் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சி விசாரனை மற்றும் இரதரப்பு விசாரனை முடிந்து ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் 2 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணிமொழி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதம்சிகாமணி, கோதகுமார், சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இவ்வழக்கில் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அளிக்கப்படும் என நீதிபதி மணிமொழி தெரிவித்தார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு, பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சற்று முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதிகளவில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் நிரூபிக்காத காரணத்தால் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications