சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு.. புதிய அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு.. கொந்தளிக்கும் ஏழை மக்கள்!
சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணைக்கு சென்னை மற்றும் புறநகர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 54 ரயில் சேவைகள் ரத்து செய்திருப்பது, பல ஆயிரம் ஏழை மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட போகிறது என பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை மாநகரம் என்பது தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த நகரத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் உள்ள மக்கள் வசிக்கிறார்கள். சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலேயே சென்னையில் மட்டும் தான் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழித்தடத்திலும், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை வழித்தடங்களிலும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக சென்னை மாநகரில் மின்சார ரயில்களின் காலஅட்டவணை ஆண்டுதோறும் மாற்றிஅமைக்கப்படும். அதன்படி, இந்தஆண்டுக்கான மாற்றப்பட்ட காலஅட்டவணை ஜூலை 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும் கால அட்டவணையை மாற்றும் போது, பயணிகளின் வசதிக்காக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஆண்டு ரயில் சேவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 54 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை பேருந்துகளை விட புறநகர் ரயிலில் பயணிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படியான சூழலில் பல முக்கியமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் என்னென்ன? சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. தாம்பரம் வழித்தடத்தில் 19 சேவைகளும், வேளச்சேரி வழித்தடத்தில் 19 ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் எல்லாம் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாக சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயில் சேவையை நம்பித்தான் வாழ்கிறார்கள். அப்படியான சூழலில் புறநகர் ரயில் சேவையை கணிசமாக குறைத்திருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு கடைசி ரயில் சேவை நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு கடைசி ரயிலை தவறவிடும் பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்துக்குச் சென்று இந்த ரயிலில் ஏறிச் செல்வார்கள். இந்த ரயில் தான் சென்னை துறைமுகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளில் 2-வது ஷிப்ட் பணி முடிந்து செல்லும் தொழிலாளர்களின் வாழ்வில் கலந்த ரயில்.
இந்நிலையில் புதிய கால அட்டவணையில் கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணத்துக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அதேபோல் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் மட்டும்தான் ரயில் சேவை ரத்து செய்திருப்பதாக ரயில்வே விளக்கம் அளித்தாலும் இரவு நேர ரயில்களை ரத்து செய்வது பல்வேறு சிரமங்களை தரும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications