வேற வழி இல்லை.. அன்புமணி எடுக்கும் ‘பிரம்மாஸ்திரம்’.. பாமகவில் கிளைமேக்ஸ்.. உற்சாகமான பாட்டாளிகள்!
சென்னை: பாமகவில் அடுத்து என்ன இவ்வளவு போகிறது? என்பது தான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கிவரும் நிலையில் பாமக விதி 15 படி அது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். இந்த நிலையில் கட்சியின் பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்ட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு இடையே பிரச்சனை இருப்பது எப்போதும் சகஜம் தான். அதே நேரத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் பிரச்சனை வரும். அப்படித் தான் பாமகவிலும் கட்சிக்குள்ளேயே பிரச்சனை வெடித்திருக்கிறது.
தந்தை மகன் இடையேயான அதிகார மோதலில் சிக்கித் தவிக்கிறது பாமக. கட்சியை உருவாக்கிய ராமதாஸ் மகன் அன்புமணி தனக்கு கீழே இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதாவது கூட்டணி பேச்சு வார்த்தை, நிர்வாகிகள் நியமனம் என அனைத்து முடிவுகளையும் தான் எடுக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ்.

பாமக மோதல்
ஆனால் கால சூழலுக்கு ஏற்ப ஒரு சில முடிவுகளை மாற்ற வேண்டும் என்பது அன்புமணியின் எண்ணம். இதனால் தந்தை மகன் இடையே மோதல் வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் அதன் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். ஆனால் மாநாட்டுக்கு முன்னதாகவும், மாநாட்டின் போதும் ராமதாஸின் பேச்சு அன்புமணி ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டங்களை பெரும்பாலான மாவட்ட தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் புறக்கணித்தனர். இதனால் கட்சியில் தன்னை விட தனது மகன் அன்புமணிக்கு தான் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்ந்த ராமதாஸ் அவர் தரப்பு ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி வருகிறார். பாமக மாநில செயலாளர் தொடங்கி பொருளாளர், மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இதுவரை நீக்கியுள்ளார்.
ராமதாஸ்
அதிர்ச்சி தரும் விதமாக அன்புமணியை நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ஜிகே மணி மறுத்திருக்கிறார். மேலும் விரைவில் தந்தை மகன் மோதல் முடிவுக்கு வரும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார். ஆனால் பாம கட்சியில் தலைவருக்கு தான் அதிகாரம் என்கின்றனர் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள். அதாவது பாமக விதி 15 கீழ் மாநில தலைவர் இல்லாமல் நடத்தப்படும் கூட்டங்கள், அமைப்பு செயல்பாடுகள் என எதுவும் செல்லாது எனவும், மாநில தலைவருக்கு தான் நிர்வாகிகளை நீக்கும், சேர்க்கும் அதிகாரம் இருக்கும் என்கின்றனர்.
பாமக குழப்பம்
இது ஒருபுறம் இருக்க அன்புமணியின் டெல்லி பயணமும் கவனத்தைப் பெற்று இருக்கிறது. தனக்கு தான் நிர்வாகிகளை சேர்க்கும் நீக்கும் அதிகாரம் இருப்பதாக முறையிட்டதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர். இந்த நிலையில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ் இந்த மாத இறுதியில் 100 நாள் சுற்றுப்பயணத்தை துவக்க இருக்கிறார். இதற்கிடையே ராமதாஸும் கும்பகோணத்தில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு
தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் அதிகார யுத்தம் நிர்வாகிகள் தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கடைசி கட்ட ஆயுதமாக பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு அன்புமணி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் பொதுக்குழு அறிவிப்பு வரும் எனவும், கட்சியின் மாநில தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வதோடு, கட்சி விதிகளில் சில மாற்றம் இருக்கும் என்கின்றனர்.
உட்கட்சி மோதல்
அதாவது ஏற்கனவே இருக்கும் விதி 15 மேலும் சில உப விதிகளுக்கு உட்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கட்சி நிறுவனர் கௌரவ தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல், மாநில தலைவருக்கே முழு அதிகாரமும் இருக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். அதே நேரத்தில் நிறுவனர் மற்றும் கௌரவ தலைவர் பதவியில் இருப்பவர்களை நீக்கும் எண்ணம் அன்புமணிக்கு இல்லை எனவும், முழு அதிகாரம் தலைவருக்கு மட்டுமே என்ற முறையில் இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications