ஆம்ஸ்ட்ராங் பக்கத்துல இப்ப ஆள் இல்ல.. கொலையாளிகளுக்கு சிக்னல் கொடுத்த ஏரியாவாசி.. யார் இந்த பிரதீப்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 18வது நபராக கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் தான், ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து கொலையாளிகளுக்கு சிக்னல் கொடுத்தவர் எனத் தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று ஆம்ஸ்ட்ராங்குக்கு அருகில் ஆட்கள் அதிகம் இல்லை என்று தகவல் கொடுத்ததும் இவர் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 18 நபர்களை செம்பியம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது என்கவுண்டர் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பல ரவுடிகள்: இதையடுத்து மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல ரவுடி தோட்டம் சேகரின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்கொடிக்கு உதவியதாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ்குமார், பிரபல கஞ்சா வியாபாரியும் ரவுடியும், பாஜக நிர்வாகியுமான வட சென்னை அஞ்சலை, திருவள்ளூர் மாவட்டம் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹரிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
18வது நபர் பிரதீப்: இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய நபராகச் செயல்பட்ட சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவா, பிரபல ரவுடி சம்போ செந்தில் என்பவர் உடன் தொடர்பில் இருந்து கொண்டு கொலை குற்றவாளிகளுக்கு பண பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினர் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னிப்பாக கவனித்து சிக்னல்: பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த பிரதீப் (28). சிறிது காலம் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் புதிதாக வீடு கட்டி வரும் பகுதியில் வசித்து வருகிறார் பிரதீப். பிரதீப் தான் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து தகவல் தெரிவித்து வந்துள்ளார்.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் பெரம்பூரில் உள்ள வீட்டை எப்போது பார்க்க வருவார்? எந்த இடத்தில் நின்றவாறு வீட்டு வேலைகள் நடப்பதை மேற்பார்வை செய்வார்? அவருடன் தினமும் யார் யார் வருவார்கள்? அங்கு வரும்போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பாரா? போன்ற தகவலை அவ்வப்போது வழக்கறிஞர் அருளுக்கு தெரிவித்து வந்துள்ளார்.
ரூட் போட்டுக் கொடுத்த பிரதீப்: இதன் மூலம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் மிக குறைவாக உள்ளனர் என முதலில் பிரதீப் வழக்கறிஞர் அருளுக்கு போன் செய்து கூறியுள்ளார். பிரதீப் ரூட் போட்டுக் கொடுத்தன் அடிப்படையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக கைது செய்யப்பட்ட பிரதீப் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications